முச்சக்கர வண்டி நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞன் ஒருவர் பலி.
வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் பிக்கப் ரக வாகனமும், முச்சக்கர வண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார்.
(01.01) இரவு 7.40 மணியளவில் இடம்பெற்ற குறித்த விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற பிக்கப் ரக வாகனமும்,
நொச்சிமோட்டைப் பகுதியில் இருந்து வவுனியா நகர் நோக்கி வந்த முச்சக்கரவண்டியும் தாண்டிக்குளம் பகுதியில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
குறித்த விபத்தையடுத்து முச்சக்கரவண்டி தடம்புரண்டு முழுமையாக சேதமடைந்துள்ளதுடன், பிக்கப் வாகனம் கட்டுப்பாட்டையிழந்து அருகில் இருந்த மரத்துடனும் மோதியுள்ளது.
குறித்த விபத்தில் முச்சக்கர வண்டி சாரதியான வவுனியா, தோணிக்கல் பகுதியைச் சேர்ந்த 32 வயதான ரஜீபன் என்பவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.
சம்பவ இடத்திற்கு வருகை தந்த போக்குவரத்து பொலிசார் விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட போது அப் பகுதிக்கு வந்த இளைஞர்களுக்கும், பிக்கப் வாகன சாரதி மற்றும் அதில் பயணித்தவருக்குமிடையில் வாய்தர்க்கம் ஏற்பட்டு குழப்ப நிலை ஏற்பட்டது.
இதனையடுத்து, வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பீ.பீ.மானவடு தலைமையில் மேலதிக பொலிசார் சம்பவ இடத்திற்கு வருகை தந்ததுடன், நிலமைகளை கட்டுப்படுத்தினர்.
பிக்கப் வாகன சாரதி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அதில் பயணித்தவரும் பொலிசாரால் அழைத்து செல்லப்பட்டுள்ளார். விபத்து குறித்து வவுனியா பொலிசார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.