அரசை விமர்சிப்பவர்களுக்கு அமைச்சுப் பதவி எதற்கு? – கோட்டா கடும் சீற்றத்துடன் கேள்வி.
“தகுதியில்லாதவர்களை அமைச்சுப் பதவிகளிலிருந்து நீக்குவதற்கு ஜனாதிபதியான எனக்கு முழு அதிகாரம் உண்டு.”
– இவ்வாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்தார்.
ஆளும் கட்சியின் முக்கியஸ்தர்களுடன் நேற்று (04) நடத்திய விசேட கலந்துரையாடலின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
“அரசின் முதுகெலும்பாக அமைச்சர்களும், இராஜாங்க அமைச்சர்களும் இருக்க வேண்டும். அவ்வாறானவர்கள் அரசையும், அதன் கொள்கையையும் பொது வெளியில் விமர்சிப்பது எந்த வகையில் நியாயம்? அவர்களுக்கு அமைச்சுப் பதவி எதற்கு?
இது அவர்களின் ஒழுக்கமின்மையையும், தகுதியின்மையையும் எடுத்துக் காட்டுகின்றது. அப்படியானவர்களின் பதவியைப் பறிக்க ஜனாதிபதியான எனக்கு முழு அதிகாரம் உண்டு. இது தொடர்பில் அரச கட்சிகளுடன் நான் பேச வேண்டிய அவசியம் இல்லை.
சுசில் பிரேமஜயந்தவின் இராஜாங்க அமைச்சுப் பதவி திட்டமிட்டுப் பறிக்கப்படவில்லை. ஓரணியாக – கூட்டுப் பொறுப்புடன் செயற்பட வேண்டிய அவர், பொது வெளியில் அரசைக் கண்டபடி விமர்சித்திருந்தார். அதனால் அவர் பதவியை இழக்க வேண்டி வந்தது.
அமைச்சர்களும், இராஜாங்க அமைச்சர்களும் ஓரணியில் செயற்பட்டால்தான் அரசு முன்னோக்கிப் பயணிக்கும்; நாடும் வளம் பெறும்” – என்றார்.