தனி ஒரு நபராக சென்று சாதனை.
அண்டார்டிகா பனிப்பிரதேசத்தில் தனி ஒருநபராக 1,127 கிமீ பயணித்து தென் துருவத்தை தொட்ட முதல் இந்திய வம்சாவளி என்ற சாதனையை இங்கிலாந்து ராணுவ பெண் கேப்டன் ஹர்பிரீத் சண்டி படைத்துள்ளார்.
இங்கிலாந்தில் பிறந்த இந்திய சீக்கியரான ஹர்பிரீத் சண்டி (வயது 32), ராணுவ கேப்டனாகவும் பிசியோதெரபிஸ்டாகவும் உள்ளார்.
இவர் தனி ஆளாக தென் துருவத்தை தொடும் தனது சவால் நிறைந்த பயணத்தை கடந்த நவம்பர் மாதம் 7ஆம் திகதி தொடங்கி உள்ளார்.
‘போலார் பிரீத்’ என பிரபலமாக அழைக்கப்படும் சண்டி, சிலி நாட்டிற்கு சென்று அங்கிருந்து அண்டார்டிகாவில் மலையேற்றத்தை தொடங்கினார். எந்த ஒரு துணையும் இன்றி, முழுக்க முழுக்க பனி படர்ந்த பகுதியில் உணவு, மருந்துகள், கூடாரம் என சுமார் 30 கிலோ எடையுள்ள பொருட்களையும் அவர் தன்னுடனே எடுத்துச் சென்றுள்ளார்.
இந்த பொருட்களுடன் 40 நாட்கள் 1,127 கிலோ மீட்டர் பயணம் செய்து, தென் துருவ பயணத்தை முடித்துள்ளார். அவரது பயணத்தின் போது, மைனஸ் 50 டிகிரி செல்சியஸ் குளிர் நிலவியதாகவும், 60 மைல் வேகத்தில் பனிக்காற்று வீசியதாகவும் சண்டி கூறி உள்ளார்.
இதன் மூலம் தென் துருவத்தை தொட்ட முதல் இந்திய வம்சாவளி பெண் என்ற சாதனையை சண்டி படைத்துள்ளார்.
முன்னதாக, கடந்த 1994ல், நார்வேயின் லிவ் அர்னசென் தென் துருவத்திற்கு தனியாக பயணம் செய்த உலகின் முதல் பெண்மணி என்பது குறிப்பிடத்தக்கது.