பிரதமர் பாதுகாப்பில் குளறுபடி: பஞ்சாப் அரசுக்கு காங்கிரஸ் தலைவர் கண்டனம்
பிரதமர் பாதுகாப்பு ஏற்பாட்டில் குறைபாடு ஏற்பட்ட விவகாரத்தில், காங்கிரஸ் ஆளும் பஞ்சாப் அரசை சக காங்கிரஸ் தலைவர் ஒருவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
42,750 கோடி ரூபாய் மதிப்பிலான எக்ஸ்பிரஸ்வே, PGIMER செயற்கைக்கோள் மையம் உள்ளிட்ட வளர்ச்சித்திட்டங்களின் அடிக்கல் நாட்டு விழாவுக்காக நேற்று பிரதமர் மோடி பஞ்சாப் மாநிலத்திற்கு சென்றிருந்தார். முதலில் பதிண்டாவுக்கு சென்று அங்கிருந்து பெரோஸ்பூருக்கு ஹெலிகாப்டரில் செல்வதாக இருந்தது. இருப்பினும் தொடர் மழை மற்றும் வெளிச்சம் குறைவு காரணமாக பயணத்தை சாலை மார்க்கமாக தொடர பயணத்திட்டம் மாற்றப்பட்டது. அதற்கு முன்பாக, பஞ்சாப் டிஜிபியிடம், பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் பிரதமர் மோடி செல்லக் கூடிய வழியில் மிகச்சரியாக உள்ளதென உறுதி செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் பிரதமர் மோடி செல்லும் வழியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் சாலை மறிக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக பிரதமர் மோடி தனது கான்வாய் வாகனங்களுடன் அங்குள்ள மேம்பாலம் ஒன்றில் சுமார் 20 நிமிடங்கள் காக்க வைக்கப்பட்டிருந்தார். பின்னர் தனது பயணத்தை ரத்து செய்து விட்டு மீண்டும் பதிண்டா விமான நிலையத்துக்கே அவர் திரும்பினார்.
பிரதமர் மோடிக்கு தீவிரவாத அச்சுறுத்தல் இருக்கும் நிலையில், இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பஞ்சாப் மாநில அரசு மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. எந்தவொரு இந்திய பிரதமருக்கும் இப்படி ஒரு பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டதில்லை என உள்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பாக பஞ்சாப் மாநில முன்னாள் காங்கிரஸ் தலைவரான சுனில் ஜாக்கர், பஞ்சாப் காங்கிரஸ் அரசை விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக சுனில் ஜாக்கர் வெளியிட்டுள்ள ட்விட்டர்பதிவில், “இன்று (ஜனவரி 5) நடந்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. இது பஞ்சாபியத்துக்கு எதிரானது. பெரோஸ்பூரில் பாஜகவின் அரசியல் பேரணியில் இந்தியப் பிரதமர் உரையாற்றுவதற்கான பாதுகாப்பான வழி உறுதி செய்யப்பட்டிருக்க வேண்டும். ஜனநாயகம் இப்படித்தான் செயல்பட வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.
பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா இதுபற்றிகூறும்போது, ‘பிரதமர் மோடி ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள நலத்திட்டங்களை பஞ்சாபுக்கு வழங்குவதற்காக அங்கு சென்றார். அவரது பாதுகாப்பில் இப்படியொரு குளறுபடி ஏற்பட்டிருப்பது வருத்தம் அளிக்கிறது. இதை பஞ்சாப் முதல்வர் நினைத்திருந்தால் சரி செய்திருக்கலாம்’ என்று விமர்சித்துள்ளார்.