அரியலூரில் அரசுப்பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து – 20 பேர் படுகாயம்
அரியலூர் – ஜெயங்கொண்டம் அருகே அரசு பேருந்தும், லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் டிரைவர் உட்பட 20 பேர் படுகாயம் அடைந்தனர்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கச்சிப்பெருமாள் கிராமம் அருகே குறுக்கே வந்த ஆட்டோவால் நிலைதடுமாறிய அரசுப் பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இந்த விபத்தில் ஆட்டோ டிரைவர், அரசு பேருந்து ஓட்டுனர் மற்றும் பயணிகள் உட்பட 20 பேர் படுகாயங்களுடன் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பெரம்பலூரில் இருந்து அரியலூர் வழியாக ஜெயங்கொண்டம் வந்து கொண்டிருந்த அரசு பேருந்தும் நெய்வேலியிலிருந்து சிமெண்ட் ஆலைக்கு சுண்ணாம்புக்கல் ஏற்றிச்சென்ற லாரியும் கச்சி பெருமாள் அருகே சென்ற போது இடையே புகுந்த ஆட்டோவால் நேருக்குநேர் மோதிக்கொண்டது. ஜெயங்கொண்டம் அருகே உள்ள அங்கராயநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் ஆனந்தன் என்பவர் உடையார்பாளையம் சவாரி சென்று திரும்பி வருகையில் அரசு பேருந்தை முந்துவதற்காக முந்திய போது எதிரே வந்த லாரியும் அரசு பேருந்தும் ஆட்டோவின் மீது நேருக்கு நேர் மோதியது.
இந்த சம்பவத்தில் ஆட்டோ ஓட்டி வந்த ஆனந்தன் படுகாயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் லாரியும் பேருந்தும் மோதிக்கொண்டதில் அரசு பேருந்து ஓட்டுநர் உள்பட பயணிகளும் 20 ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த பெரும் விபத்தில் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.