உச்சநீதிமன்றத்திற்கு முதல்முறையாக பெண் நீதிபதி நியமனம்.
பாகிஸ்தான் சுதந்திரம் அடைந்ததிலிருந்து அந்நாட்டின் உச்சநீதிமன்றத்தில் ஆண் நீதிபதிகளே நியமிக்கப்பட்டு வந்தனர்.
இந்நிலையில் முதல்முறையாக ஆயிஷா மாலிக் என்கிற பெண் நீதிபதியை நியமிக்க அந்நாட்டின் சட்ட கமிஷன் ஒப்புதல் அளித்துள்ளது.
55 வயதான ஆயிஷா மாலிக் தற்போது லாகூர் நீதிமன்றத்தின் நீதிபதியாக செயல்பட்டு வருகிறார். விரைவில் அவர் பாகிஸ்தானின் முதல் உச்சநீதிமன்ற பெண் தலைமை நீதிபதியாக பதவியேற்பார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
ஆயிஷா மாலிக்கை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்க கடந்த ஆண்டே அவரது பெயர் பரிசீலிக்கப்பட்டது.
ஆனால், உச்சநீதிமன்ற வழக்கறிஞர்களின் எதிர்ப்பு காரணமாக ஆயிஷா மாலிக்கின் பதவி உயர்வு நிராகரிக்கப்பட்டது.
நாட்டில் உள்ள 5 உயர்நீதிமன்றங்களில் பணியாற்றும் நீதிபதிகளை காட்டிலும் ஆயிஷா மாலிக் இளையவர் என்றும், அவரை நியமித்தால் போராட்டம் நடத்தப்படும் என்றும் வழக்கறிஞர்கள் போர்க்கொடி உயர்த்தினர்.
இந்த முறையும் எதிர்ப்புகளை மீறி ஆயிஷா மாலிக் பரிந்துரைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.