ஆசிய அபிவிருத்தி வங்கியின் வருடாந்த கூட்டம் கொழும்பில்…..
2022 மே 2 – 5 வரை கொழும்பில் நடைபெறவுள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் வருடாந்தக் கூட்டத்திற்கான ஏற்பாடுகள் குறித்து கலந்துரையாடுவதற்காக, வெளியுறவுச் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே அவர்களின் தலைமையில் 2022 ஜனவரி 11ஆந் திகதி வெளிநாட்டு அமைச்சில் சந்திப்பொன்று இடம்பெற்றது.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் செயலாளர் திரு. முஹம்மது எஹ்சான் கான் தலைமையிலான ஆசிய அபிவிருத்தி வங்கியின் உயர்மட்ட பிரதிகள் குழுவினர், கொழும்பில் உள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் வதிவிட அலுவலகத்தின் உயர்மட்ட அதிகாரிகள், ஆசிய அபிவிருத்தி வங்கியின் வருடாந்தக் கூட்ட செயலகத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கலாநிதி தொன் எஸ். ஜயவீர, வருடாந்தக் கூட்டத்தின் நிபுணத்துவ மாநாட்டு ஏற்பாட்டாளர்கள், நிதியமைச்சு மற்றும் வெளிநாட்டு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளுடன் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஸ்தாபக உறுப்பினரான இலங்கை, ஆசிய அபிவிருத்தி வங்கியின் கௌரவமான வருடாந்தக் கூட்டத்தை தெற்காசியப் பிராந்தியத்தில் நடாத்தும் இரண்டாவது நாடாகும். கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் 68 உறுப்பு நாடுகளைச் சேர்ந்த நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கிகளின் ஆளுநர்கள் உட்பட 3000 இற்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
வருடாந்தக் கூட்டத்திற்கான ஒட்டுமொத்த நெறிமுறை ஏற்பாடுகளை வெளிநாட்டு அமைச்சு வழிநடாத்தி, வருகை தரும் பிரமுகர்களுக்கான இருதரப்பு ஈடுபாடுகளை ஒருங்கிணைக்கும். நிகழ்வை வெற்றிகரமாக நடாத்துவதற்கு வெளிநாட்டு அமைச்சின் முழு ஆதரவையும் வெளியுறவுச் செயலாளர் உறுதியளித்தார்.