வன்முறையற்ற பொதுத்தேர்தல் : யாழ். மாவட்டத்தில் 67.72 சதவீதம் வாக்களிப்பு

நாளை காலை வாக்கெண்ணும் பணி ஆரம்பம்

இலங்கையின் 9 ஆவது நாடாளுமன்றத்துக்கு உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான பொதுத்தேர்தல் இன்று வன்முறைகள் இன்றி நடைபெற்றது.

காலை 7 மணிக்கு ஆரம்பமான பொதுத்தேர்தலுக்கான வாக்களிப்பு மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது.

கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தலால் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றியே வாக்களிப்பு இடம்பெற்றது.

22 தேர்தல் மாவட்டங்களில் இருந்தும் வாக்களிப்பதற்கு ஒரு கோடியே 62 இலட்சத்து 63 ஆயிரத்து 885 பேர் தகுதி பெற்றிருந்தனர்.

அந்தவகையில், நாடளாவிய ரீதியில் 60 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளன என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 67.72 சதவீதமான வாக்குகள் பதிவாகியுள்ளன. அதற்கமைய 3 இலட்சத்து 24 ஆயிரத்து 770 பேர் வாக்களித்துள்ளனர். அவர்களில் வாக்களிப்பு நிலையங்களில் 3 இலட்சத்து 3 ஆயிரத்து 941 பேரும், தபால் மூலம் 20 ஆயிரத்து 829 பேரும் வாக்களித்துள்ளனர்.

வாக்களிப்பு மாலை 5 மணிக்கு முடிவடைந்ததையடுத்து வாக்குப் பெட்டிகள் ‘சீல்’ வைக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் வாக்கெண்ணும் நிலையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.

நாளை காலை 7 மணி முதல் வாக்கெண்ணும் பணி ஆரம்பமாகும். மாலை 4 மணிக்குள் முதலாவது முடிவு வெளிவரும் எனவும், நள்ளிரவுக்குள் இறுதி முடிவு வெளியாகும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Comments are closed.