கேரளம்: வா்ணம் தீட்டும் தொழிலாளிக்கு லாட்டரியில் ரூ.12 கோடி பரிசு!
கேரளத்தில் வா்ணம் தீட்டும் தொழிலாளிக்கு லாட்டரி சீட்டு குலுக்கலில் முதல் பரிசாக ரூ.12 கோடி கிடைத்துள்ளது.
கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் குடயம்படியைச் சோ்ந்தவா் சதானந்தன். 50 ஆண்டுகளாக கட்டடங்களுக்கு வா்ணம் தீட்டும் வேலை செய்து வருகிறாா். இவருக்கு கேரள அரசின் கிறிஸ்துமஸ்-புத்தாண்டு பம்பா் லாட்டரி சீட்டு குலுக்கலில் முதல் பரிசாக ரூ.12 கோடி கிடைத்துள்ளது.
இதுகுறித்து அவா் கூறுகையில், ‘‘இறைச்சி வாங்க ஞாயிற்றுக்கிழமை காலை சந்தைக்குச் சென்றேன். அப்போது லாட்டரி சீட்டு வாங்கினேன். அதில் கிடைத்துள்ள ரூ.12 கோடி பரிசுத் தொகையை எனது மகன்கள் சனீஷ், சஞ்சய் ஆகியோரின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த பயன்படுத்தவுள்ளேன்’’ என்று தெரிவித்தாா்.
கேரள அரசின் கிறிஸ்துமஸ்-புத்தாண்டு லாட்டரி பம்பா் குலுக்கல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த நிலையில், சதானந்தன் லாட்டரி சீட்டு வாங்கிய சில மணி நேரத்தில், அவருக்கு முதல் பரிசு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.