குற்றவாளி வெளியில்; சுற்றவாளி சிறையில்! – கோட்டாபய அரசை சாடுகின்றார் சஜித்.
குற்றவாளிகளைத் தப்பவிட்டு சுற்றவாளிகளைச் சிறையில் அடைக்கும் அரசே கோட்டாபய அரசு என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ சாடினார்.
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியாகச் செயற்பட்டவர்களைப் பிடிக்க அரசால் முடியவில்லை. இது தொடர்பான விசாரணைகள் எதுவும் நம்பகத்தன்மையுடன் இடம்பெறவில்லை. இது ஏன்? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் மஸ்கெலியா தேர்தல் தொகுதியின் அமைப்பாளர் கபில நாகந்தலவின் ஏற்பாட்டில் ஹட்டன் டி.கே.டபிள்யூ மண்டபத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் நேற்று மக்கள் சந்திப்பு நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அதேவேளை, பொரளைப் பகுதியில் தேவாலயமொன்றிலிருந்து கைக்குண்டொன்று மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுவரும் விசாரணைகள் தொடர்பிலும் தமக்குச் சந்தேகம் இருக்கின்றது எனவும் சஜித் பிரேமதாஸ சுட்டிக்காட்டினார்.