சு.க. குறித்து முடிவொன்றை எடுத்த பின்பே அமைச்சரவை மறுசீரமைப்பு கோட்டாபய தீர்மானம்.
அரசிலிருந்து வெளியேறுவதற்கான அறிகுறிகளை அதன் பங்காளியான ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வெளிப்படுத்தியுள்ளது. எனவே, அக்கட்சியினர் தொடர்பில் முடிவொன்றை எடுத்த பின்னரே அமைச்சரவையை மறுசீரமைக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தீர்மானித்துள்ளார் என ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அந்தச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-
இம்மாதம் இறுதியில் இடம்பெறவிருந்த அமைச்சரவை மாற்றத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஒத்திவைத்துள்ளார் என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
அரசிலிருந்து வெளியேறுவதற்கான அறிகுறிகளை ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வெளிப்படுத்தியுள்ளது. எனவே, அக்கட்சியினர் தொடர்பில் முடிவொன்றை எடுத்த பின்னரே அமைச்சரவை மறுசீரமைக்கப்படும் எனத் தெரியவருகின்றது.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களும் அரசைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். புதிய கூட்டணியொன்றை அமைக்கும் முயற்சியிலும் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில், சுதந்திரக் கட்சியை அரசிலிருந்து வெளியேற்றுமாறு மொட்டு கட்சி தரப்பிலும் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே அமைச்சரவை மறுசீரமைப்பு பிற்போடப்பட்டுள்ளது – என்றுள்ளது.