நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் : அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் மாநில தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை விரைந்து நடத்துவதற்கான பணிகளை மாநில தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் நிலையில், இது தொடர்பாக அனைத்துக் கட்சி பிரதிநிதிகளுடன் மாநில தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை நடத்துகிறது.
தமிழகத்தில் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் இரண்டு பிரிவுகளாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து, 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை விரைந்து நடத்துவதற்கான பணிகளை மாநில தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.
பெண்கள் மற்றும் பட்டியலினத்தவர்களுக்கான தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்நிலையில், அனைத்துக் கட்சிகளுடன் மாநில தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை நடத்துகிறது. சென்னை கோயம்பேட்டில் உள்ள மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் காலை 11.30 மணிக்கு நடைபெறும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில், கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தங்களது கருத்துக்களை எடுத்துரைக்க உள்ளனர்.
இந்நிலையில், தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதால் வார்டுகள் பங்கீடு மற்றும் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில், பல்வேறு கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. இத்தேர்தல் பிப்ரவரி மாதம் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுவதால், பல்வேறு அரசியல் கட்சிகள் கூட்டணி கட்சியினருடன் வார்டு பங்கீடு மற்றும் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் மும்முரம் காட்டி வருகின்றன.
திமுகவை பொறுத்தவரை ஒரு வார்டுக்கு 50 முதல் 75 விருப்ப மனுக்கள் வந்துள்ளதாகவும், அதை இறுதி செய்யும் பணியில் அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் திருச்சியில் அமைச்சரும், திமுக முதன்மை செயலாளருமான கே.என்.நேரு தலைமையில், வார்டு பங்கீடு தொடர்பாக கூட்டணி கட்சிகளுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. திருச்சி மாநகராட்சியில் உள்ள 65 வார்டுகளில் 50 வார்டுகள் திமுகவுக்கும், மீதமுள்ள 15 வார்டுகள் கூட்டணிக்கு கட்சிக்கும் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதேபோல் அதிமுகவில் வேட்பாளர்களை தேர்வு செய்வது தொடர்பாக கட்சி நிர்வாகிகளுடன், ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். ஏற்கனவே விருப்ப மனுக்கள் அளித்தவர்களிடம், மாவட்ட அளவில் நேர்காணல் நடத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே திருச்சியில் பாஜக சார்பில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நேர்காணல் நடத்தினார்.