தமிழ் மக்களின் நிலத்தை அபகரித்து படையினர் வீதி அமைப்பு! – கோட்டாவின் பொய் பித்தலாட்டம் அம்பலம்.
“வடக்கு, கிழக்கில் இராணுவத்தினர் வசமுள்ள தமிழ் மக்களின் நிலம் விடுவிக்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாடாளுமன்றத்தில் உரையாற்றி சில மணி நேரத்தில் கட்டுவனில் தமிழ் மக்களின் நிலத்தை அபகரித்து படையினர் வீதி அமைக்கின்றனர். இந்த நடவடிக்கை ஜனாதிபதியின் பொய் பித்தலாட்டத்தை அம்பலப்படுத்துகின்றது.”
இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“நேற்றைய நாடாளுமன்ற சம்பிரதாய உரையில் இந்த நாட்டின் ஜனாதிபதி நான்தான் என்பவர் கூறுகின்றார் மக்களின் நிலங்கள் விடுவிக்கப்படும் என. ஆனால், அன்றைய தினமே கட்டுவன் மயிலிட்டி வீதியில் வெறும் 400 மீற்றர் நீளமும் 26 மீற்றர் அகலமும் கொண்ட நிலத்தைக்கூட விடமாட்டோம் எனப் படையினர் அடாத்தாக வீதி அமைக்கின்றனர்.
அவ்வாறெனில் இந்த நாட்டிலே ஜனாதிபதியின் சொல்லைக்கூட மதிக்காத இராணுத்தினர் இருக்கின்றனர் எனத் தெரிகின்றது. படைத் தரப்பு நேற்றும் இன்றும் அவசர அவசரமாக ஆக்கிரமித்து வைத்திருக்கும் பகுதியில் டோசர்கள், டிப்பர் வாகனங்கள் மூலம் வீதி அமைக்கின்றனர்.
அந்த வீதியமைப்பு தொடர்பில் வீதி அபிவிருத்தி அதிகார சபை வாய் மூடியுள்ளது.
சட்ட விரோதமாக அமைக்கப்படும் வீதி தொடர்பில் இதுவரை எந்த அதிகாரிகளும் வாய் திறக்காதமையால் உரியவர்கள் வழக்குத் தாக்கல் செய்ய என்னை நாடுகின்றனர். இதுதான் இந்த நாட்டின் நிலைமை என்பதனை சர்வதேசம் புரிந்துகொள்ள வேண்டும்” – என்றார்.