நடிகை விஜயலட்சுமி தற்கொலை விவகாரம் : சிறையில் உள்ள ஹரி நாடார் மீண்டும் கைது
மோசடி வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள பனங்காட்டு படை கட்சியின் ஒருங்கிணைப்பாளரான ஹரி நாடாரை நடிகை விஜயலட்சுமி தற்கொலைக்கு முயன்றபோது அளித்த மரண வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீசார் மீண்டும் கைது செய்தனர்.
நடிகை விஜயலட்சுமி நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளரான சீமான் தன்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி ஏமாற்றி விட்டதாக 2020ஆம் ஆண்டு வீடியோ ஒன்றை வெளியிட்டார். இந்த வீடியோ சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் சீமானுக்கு ஆதரவாக பனங்காட்டு படை கட்சியின் ஒருங்கிணைப்பாளரான ஹரி நாடார் மற்றும் சதா ஆகியோர் விஜயலட்சுமியை மிரட்டும் விதமாக வீடியோ வெளியிட்டனர்.
இதனால் விஜயலட்சுமி தூக்குமாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். பின்னர் இந்த சம்பவம் குறித்து விஜயலட்சுமி அளித்த புகாரின் பேரில் சீமான், ஹரிநாடார் மற்றும் சதா ஆகியோர் மீது திருவான்மியூர் போலீசார் கொலை மிரட்டல், பெண்ணை அவமதித்தல், தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வந்தனர்.
இதற்கிடையே கடன் வாங்கி தருவதாக பணம் பெற்று மோசடி செய்த வழக்கில் ஹரி நாடாரை பெங்களூர் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து பரப்பன அக்ரஹார சிறையில் அடைத்தனர். பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஹரி நாடாரை கைது செய்ய வேண்டும் என திருவான்மியூர் போலீசார் பெங்களூரு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
பெங்களூரு நீதிமன்றம் ஹரி நாடார் மீது நடவடிக்கை எடுக்க அனுமதி வழங்கியது. இதனையடுத்து திருவான்மியூர் போலீசார் பெங்களூருவிற்கு விரைந்து சென்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஹரி நாடாரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஹரி நாடாரை பெங்களூர் போலீசார் உதவியோடு சென்னைக்கு அழைத்து வரும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நாளை சைதாப்பேட்டை 18வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஹரி நாடாரை திருவான்மியூர் போலீசார் ஆஜர்படுத்த உள்ளனர்.