இன்றும் நாளையும் நாடு தழுவிய ரீதியில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்….
இந்த வருடத்தில் இதுவரை 5,000 க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் நாட்டில் பதிவாகியுள்ளனர் என்ற தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பரிவு தெரிவத்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் வைத்தியர் இந்திக்க வீரசிங்க இந்த தகவலை கூறினார்.
கடந்த வருடம் ஆகஸ்ட் மாதத்திலிருந்து டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதுடன், டிசம்பர் மாதத்தில் இதன் உச்சநிலையினை அடைந்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பரில் 9,000 டெங்கு நோயாளர்களும், இந்த வருடம் ஜனவரி மாதத்தில் 5,106 டெங்கு நோயாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
நாட்டில் பதிவாகும் டெங்கு நோயாளர்களில் 50% க்கும் அதிகமானோர் மேல் மாகாணத்தில் அடையாளம் காணப்படுகின்றனர். அதன்படி கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் பதிவாகும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளது.
மேல் மாகாணம் தவிர காலி, பதுளை, யாழ்ப்பாணம், குருணாகல், கண்டி, புத்தளம் மற்றும் இரத்தினபுரி ஆகிய பகுதிகளிலும் கணிசமான டெங்கு தொற்றாளர்கள் பதிவாகுவதாகவும் வைத்தியர் இந்திக வீரசிங்க மேலும் தெரிவித்தார்.
இதேவேளை இன்றும் நாளையும் நாடு தழுவிய ரீதியில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்ற இராஜாங்க அமைச்சு திட்டமிட்டுள்ளது.
அனைத்து அமைச்சுக்கள், உள்ளூராட்சி மன்ற நிறுவனங்கள், அரச சார்பற்ற அமைப்புக்கள் கூட்டாக இணைந்து இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளன. கடந்த வருடத்தில் நாட்டில் 25,900க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், 19 பேர் அதனால் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.