கொரோனா 3வது அலையில் உயிரிழப்பு எண்ணிக்கைகள் குறைவு: மத்திய அரசு
கொரோனா இரண்டாவது அலையைக் காட்டிலும், மூன்றாவது அலையில் உயிரிழப்பு எண்ணிக்கை குறைவாக உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா பாதிப்பு தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் சார்பில் செய்தியாளர்கள் சந்திப்பு இன்று நடைபெற்றது. அப்போது பேசிய மத்திய சுகாதாரத் துறைச் செயலர் ராஜேஷ் பூஷண், உலக அளவில் கொரோனா பாதிப்பில் ஆசியாவின் பங்களிப்பு 4 வாரங்களில் 7.9 சதவிகிதத்திலிருந்து 18.4 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இந்தியாவின் கொரோனா பாதிப்பு எண்ணிக்கைகளும் அதிகரித்துள்ளன.
நோய்த் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் மகாராஷ்டிரம், கர்நாடகம், தமிழ்நாடு, கேரளம், மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம், குஜராத், ஒடிசா, தில்லி மற்றும் ராஜஸ்தான் ஆகிய 10 மாநிலங்களில் அதிகம் உள்ளனர்.
கடந்த ஏப்ரல் 30, 2021-இல் 3,86,452 பேர் புதிதாக பாதிக்கப்பட்டனர். 3,059 பேர் உயிரிழந்தனர். 31 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் இன்றைய நிலவரப்படி, 3,17,532 புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர், 380 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தமாக 19,24,051 பேர் நோய்த் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
டெல்லியில் ஜனவரி 9 முதல் ஜனவரி 19 வரை சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 75 ஆயிரத்திலிருந்து 78 ஆயிரம் வரை இருந்தது. ஆனால், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்கள் 2,500-இல் இருந்து 2,600 பேர் மட்டும். 18 வயதுக்கு மேற்பட்ட 99 சதவிகிதத்தினருக்கு பொதுவான அறிகுறிகளாக காய்ச்சல், இருமல் மட்டுமே இருந்தன. இந்த அறிகுறிகள் 5-வது நாளில் குணமடைந்துவிடுகின்றன.
இதுவரை மொத்தம் 72 சதவிகிதத்தினர் இரண்டு தவணை தடுப்பூசியும் செலுத்திக்கொண்டுள்ளனர். 15-18 வயதுடைய சிறார்கள் 52 சதவிகிதத்தினருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் தடுப்பூசிகள் பலனளிக்கின்றன. தடுப்பூசி காரணமாக உயிரிழப்பு எண்ணிக்கைகள் குறைந்துள்ளன. தடுப்பூசி அதிகம் செலுத்திக்கொண்டதால், கொரோனா மூன்றாம் அலையில் தீவிர பாதிப்பையும் உயிரிழப்புகளையும் நாம் பார்க்கவில்லை” என்று அவர் கூறினார்.