தந்தையின் சொத்தில் மகள்களுக்கு உரிமை – உச்சநீதிமன்றம் முக்கிய தீர்ப்பு

உயில் எழுதி வைக்காமல் இறக்கும் ஒரு ஆண் இந்துவின் தானாகச் சம்பாதித்த மற்றும் தந்தை பிரிவினையில் பெற்ற பிற சொத்துக்களை வாரிசாகப் பெற மகள்களுக்கு உரிமை உண்டு என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.

கடந்த 1956ம் ஆண்டில் இந்து வாரிசு உரிமைச் சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த சட்டத்தின்படி, ஆண் வாரிசுகளுக்கு மட்டுமே தந்தையின் சொத்தில் உரிமை இருந்தது. இந்நிலையில், இந்து வாரிசு உரிமைச் சட்டம் கடந்த 2005ம் ஆண்டு திருத்தப்பட்டது. அதன்படி, மூதாதையர்களின் சொத்தில் மகள்களுக்கும் சம உரிமை உண்டு என கூறப்பட்டது.

இதனிடையே, தமிழகத்தைச் சேர்ந்த அருணாச்சலா என்பவர் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி, 1956ம் ஆண்டுக்கு முன்பாகவே குடும்பத் தலைவர் இறந்துவிட்டால், அவருடைய ஆண் வாரிசுக்கு மட்டும் தான் சொத்து உரிமையாகுமா அல்லது மகளுக்கும் சொத்தில் உரிமை உள்ளதா என்பது குறித்து உச்சநீதிமன்றம் விளக்கம் தர வேண்டும் என கோரினார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அப்துல் நசீர், கிருஷ்ணா முராரி அமர்வு நேற்று தீர்ப்பு கூறியது.

அதன்படி, 1956ல் வாரிசுரிமை சட்டம் கொண்டு வரப்பட்டாலும், அதற்கு முன்னதாக இறந்த இந்து குடும்பத்தலைவர்கள், உயில் எழுதி வைக்காத பட்சத்தில் அவருடைய சுய சம்பாத்திய மற்றும் முன்னோர்களின் சொத்துக்களில் மகள்களுக்கும் சம உரிமை இருப்பதாக தீர்ப்பு அளித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.