5 மாநில தேர்தல்: பேரணி, பிரசாரத்திற்கான தடை ஜனவரி 31வரை நீட்டிப்பு
உத்தரப் பிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. பேரணி, பிரச்சார கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், கொரோனா பரவல் காரணமாக இந்த தடையை ஜனவரி 31ம் தேதிவரை இந்திய தேர்தல் ஆணையம் நீட்டித்துள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் 70 தொகுதிகளுக்கும், கோவாவில் 40 தொகுதிகளுக்கும், பஞ்சாபில் 117 தொகுதிகளுக்கும், உத்தரப் பிரதேசத்தில் 403 தொகுதிகளுக்கும், மணிப்பூரில் 60 தொகுதிகளுக்கும் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. உத்தரப் பிரதேசத்திற்கு ஏழு கட்டங்களாகவும், பஞ்சாப், கோவா மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களுக்கு ஒரே கட்டமாகவும் மணிப்பூர் மாநிலத்திற்கு இரு கட்டமாகவும் தேர்தல் நடைபெற உள்ளது.
ஐந்து மாநிலங்களுக்கும் பிப்ரவரி 10-ம் தேதி தொடங்கி மார்ச் 7-ம் தேதி வாக்குப் பதிவு நிறைவடையவுள்ளது. மார்ச் 10-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உத்தரகாண்ட், கோவா ஆகிய 2 மாநிலங்களுக்கு பிப்ரவரி 14 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. பஞ்சாபில் பிப்ரவரி 20ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.
கொரோனா பரவல் காரணமாக , பொதுக்கூட்டங்கள், சாலைப் பேரணிகள், நேரடிப் பிரசாரங்கள் போன்றவற்றை நடத்த ஜனவரி 22ம் தேதி வரை தடை விதிக்கப்பட்டது. தற்போது, ஜனவரி 31ம் தேதிவரை இந்த தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், முதல்கட்ட தேர்தலில் போட்டியிடும் வாக்காளர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரிக்க ஜனவரி28ம்தேதி முதலும் 2ம் கட்ட தேர்தலில் போட்டியிடுவோர் பிப்ரவரி 1ம் தேதி முதலும் அனுமதிக்கப்படுவர் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்க 5 பேருக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், இதனை 10 ஆக தேர்தல் ஆணையம் உயர்த்தியுள்ளது.