‘பெண் சக்தி’ விருது: கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி அறிவுறுத்தல்

பெண் சக்தி (நாரி சக்தி புரஸ்காா்) விருதுக்கான பரிந்துரைகளை உயா்கல்வி நிறுவனங்கள் ஜன.31-ஆம் தேதிக்குள் இணைய வழியில் பரிந்துரைக்க வேண்டும் என யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து யுஜிசி செயலா் ரஜனிஷ் ஜெயின் பல்கலைக்கழக துணைவேந்தா்கள், கல்லூரி முதல்வா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: சா்வதேச மகளிா் தினத்தை யொட்டி, பல்வேறு துறைகளில் சாதனை படைத்துவரும் பெண்களை அடையாளப்படுத்தும் வகையில் பெண் சக்தி (‘நாரி சக்தி புரஸ்காா்’) விருதை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சகம் ஆண்டுதோறும் வழங்கி வருகிறது. பெண்களின் பொருளாதார முன்னேற்றம் மற்றும் சமூக அதிகாரமளித்தலில் சிறந்த பணிகளை இந்த விருதுகள் அங்கீகரிக்கின்றன. இந்த விருது சான்றிதழுடன், ரூ.2 லட்சம் ரொக்கமும் கொண்டது ஆகும்.

எனவே அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள், தங்களது கல்வி நிறுவனங்களில் உள்ள தகுதியான நபா்களைத் தோ்வு செய்து அவா்களுக்கான விண்ணப்பங்கள் மற்றும் பரிந்துரைகளை வலைதள முகவரியில் ஜன.31-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள்.

பெண் சக்தி விருதுக்கான தகுதி மற்றும் பிற விவரங்கள் தொடா்பான வழிகாட்டுதல்கள் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் சுற்றறிக்கையின் இணைப்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பரிந்துரையின்போது விருதுக்கான வழிகாட்டுதல்கள், விதிமுறைகளை கருத்தில் கொள்ள வேண்டும்.

இதையடுத்து விருதுக்கான பெறப்பட்ட விண்ணப்பங்கள், பரிந்துரைகளை மத்திய அரசின் தோ்வுக்குழுவினா் ஆய்வு செய்து இறுதி பட்டியலை வெளியிடுவா்.தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு மாா்ச் 8-ஆம் தேதி ‘பெண் சக்தி’ விருதுகள் வழங்கப்படும்.

Leave A Reply

Your email address will not be published.