விசைத் தறி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்…ரூ.1000 கோடி வர்த்தகம் பாதிப்பு
கூலி உயர்வு வழங்காத ஜவுளி உற்பத்தியாளர்களை கண்டித்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் இன்று கோவை மாவட்டம் காரணம்பேட்டை பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 1500-க்கும் மேற்பட்ட விசைத்தறி உரிமையாளர்கள் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
கோவை திருப்பூர் மாவட்டங்களில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகின்றன.இவற்றில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். ஜவுளி உற்பத்தியாளர்களிடமிருந்து கூலி அடிப்படையில் ஆர்டர்கள் பெற்று கூலிக்கு நெசவு செய்யும் வேலையை விசைத்தறி உரிமையாளர்கள் செய்து வருகின்றனர். 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை இவர்களுக்கு கூலி நிர்ணயம் செய்யப்படுவது வழக்கம். ஆனால் கடந்த 2014ஆம் ஆண்டு முதல் கூறி உயர்வானது கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்களுக்கு வழங்கப்படவில்லை.
இந்நிலையில் இது தொடர்பாக அரசிடம் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் முறையிட்டதன் விளைவாக கடந்த மாதம் கூலி உயர்வு நிர்ணயம் செய்து அரசு உத்தரவிட்டது.
ஆனால் அரசு நிர்ணயம் செய்த கூலி உயர்வை ஜவுளி உற்பத்தியாளர்கள் வழங்க மறுத்தனர்.இதனையடுத்து கடந்த 9 ம் தேதி முதல் கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த வேலை நிறுத்த போராட்டம் 15 வது நாளாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அரசு அறிவித்த கூலி உயர்வை தர மறுக்கும் ஜவுளி உற்பத்தியாளர்களை கண்டித்து இன்று கோவை மாவட்டம் காரணம்பேட்டை பகுதியில் இரு மாவட்டத்தை சேர்ந்த 1500க்கும் மேற்பட்ட விசைத்தறி உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.அப்போது கூலி உயர்வை பெற்றுத்தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.
வரும் 27 ம் தேதி நடைபெறும் பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்படவில்லை எனில் அடுத்த கட்டமாக போராட்டத்தை தீவிரப்படுத்த போவதாகவும் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். தினமும் 60 கோடி ரூபாய் வீதம் இதுவரை ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக உற்பத்தி இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட விசைத்தறி உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
விசைத்தறியாளர்களின் இந்த ஆர்ப்பாட்டத்தில் சூலூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கந்தசாமியும் கலந்து கொண்டார். அரசு நிர்ணயித்த கூலி உயர்வை ஜவுளி உற்பத்தியாளர்கள் வழங்க வேண்டும் எனவும், அதற்கு ஏற்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சூலூர் சட்டமன்ற உறுப்பினர் கந்தசாமி வலியுறுத்தினார். கடந்த 9 ம் தேதி முதல் நடைபெறும் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக 5 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.