அவிநாசியில் சோளக் காட்டில் பதுங்கியிருந்த சிறுத்தை தாக்கியதில் வன ஊழியர் காயம்
திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே சோளக் காட்டில் பதுங்கியிருந்த சிறுத்தை, தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த வன ஊழியர் ஒருவரை தாக்கியது. இதில், காயமடைந்தவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பாப்பாங்குளம் பகுதியில் வரதராஜன் என்பவர் தனது தோட்டத்தில் சோளப்பயிரை அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தார். அப்போது மறைந்திருந்த சிறுத்தை ஒன்று திடீரென அவரை தாக்கியது. மேலும், வரதராஜனுடன் வேலை பார்த்துக் கொண்டிருந்த மாறன் என்பவரையும் தாக்கிவிட்டு தப்பியோடியது. அவர்களது அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக இருவரையும் மீட்டு அவிநாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தகவலறிந்து வந்த வனத்துறையினர் சிறுத்தை நடமாட்டம் இருப்பதை உறுதி செய்ததுடன், அதை பிடிப்பதற்காக கூண்டு வைத்துள்ளனர். மேலும், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி கண்காணிப்புப் பணியிலும் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே, ட்ரோன் கேமரா மூலம் சோள காட்டிற்குள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த போது, பதுங்கியிருந்த சிறுத்தை, வன ஊழியர் ஒருவரை தாக்கியது.
இதில், லேசான காயத்துடன் தப்பிய வன ஊழியர், அவினாசி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, அப்பகுதி மக்கள் தேவையின்றி வெளியே வரவேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
”சிறுத்தை பதுங்கியுள்ள கிராமம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதியில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது என்றும், அங்கிருந்து வழிதவறி இந்த சிறுத்தை ஊருக்குள் புகுந்து இருக்கலாம் எனவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், விரைவில் சிறுத்தையை பிடிக்கும் நோக்கில் கூடுதல் வனக் காவலர்களை வரவழைக்க திட்மிட்டுள்ளனர். மேலும், கும்கி யானைகளை அழைத்து வந்து, தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.