புதுப்பிக்கப்பட்ட மத்திய சுகாதார வலைதளம் அறிமுகம்: பயனாளிகள் நேரடி மருத்துவ ஆலோசனை பெற வசதி
புதுப்பிக்கப்பட்ட மத்திய அரசு சுகாதார வலைதளம் (சிஜிஹெச்எஸ்) மற்றும் கைப்பேசி செயலியை மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா திங்கள்கிழமை அறிமுகம் செய்துவைத்தாா்.
அப்போது ‘இந்தப் புதுப்பிக்கப்பட்ட வலைதளம் மற்றும் கைப்பேசி செயலி மூலம் பயனாளிகள் நேரடி மருத்துவ ஆலோசனையைப் பெற முடியும்’ என்று அவா் கூறினாா்.
மத்திய அரசு ஊழியா்கள் மற்றும் ஓய்வு பெற்ற ஊழியா்களுக்காக மத்திய அரசு சுகாதாரத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம் 40 லட்சத்துக்கும் அதிகமான பயனாளிகள் பயனடைந்து வருகின்றனா். கரோனா காலத்தில், இந்தப் பயனாளிகள் பாதுகாப்பாக வீட்டிலிருந்தபடியே மருத்துவ ஆலோசனையைப் பெறும் வகையில், மத்திய சுகாதார அமைச்சகத்தின் சஞ்சீவினி தளத்தின் மூலம் காணொலி அழைப்பு மூலம் மருத்துவ ஆலோசனை பெறும் வசதி செய்துதரப்பட்டது.
தற்போது, இந்தப் பயனாளிகள் கைப்பேசி செயலி மூலம் வீட்டிலிருந்தபடியே நேரடி மருத்துவ ஆலோசனை பெறும் வகையில், மத்திய அரசு சுகாதார வலைதளம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இந்தப் புதுப்பிக்கப்பட்ட வலைதளத்தை திங்கள்கிழமை அறிமுகம் செய்துவைத்த மத்திய அமைச்சா் மன்சுக் மாணடவியா கூறியதாவது:
பல்வேறு புதிய வசதிகளுடன் சிஜிஹெச்எஸ் வலைதளம் மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த வலைதளத்துடன் இணைக்கப்பட்டுள்ள ‘மைசிஜிஹெச்எஸ்’ கைப்பேசி செயலி மூலம், பயனாளிகள் பாதுகாப்பாக வீட்டிலிருந்தபடியே மருத்துவ ஆலோசனைகளைப் பெற முடியும். இந்தியாவில் வளா்ந்து வரும் எண்ம (டிஜிட்டல்) தொழில்நுட்பத்தில், இது முக்கியத்துவம் வாய்ந்த முயற்சியாகும் என்று அவா் கூறினாா்.
இந்திய அரசு வலைதளங்களுக்கான வழிகாட்டுதல்களின் (ஜிஐஜிடபிள்யூ) அடிப்படையில் இந்த சிஜிஹெச்எஸ் வலைதளம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. அதன்மூலம் முழுவதும் பயனாளிகளை மையமாகக் கொண்ட, அனைத்துத் தளங்களிலும் பயன்படுத்தக் கூடிய வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது. தற்போது ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளில் மட்டும் செயல்படுத்தப்பட்டுவரும் இந்த வலைதளம், விரைவில் பல்வேறு மொழிகளில் செயல்படுத்தக் கூடிய வகையில் மேம்படுத்தப்படும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.