எட்டாக் கனியாகும் பொருண்மிய மீட்சி? : சுவிசிலிருந்து சண் தவராஜா
கொரோனாப் பெருந் தொற்று காரணமாக உலகளாவிய அடிப்படையில் ஏற்பட்டுள்ள தொழில் இழப்பு நிலைமை இந்த வருடத்தில் சீரடைவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என சர்வதேச தொழிலாளர் அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலை சீரடைய 2023 வரை காத்திருக்க வேண்டிய நிலை உள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2019 டிசம்பரில் அறிமுகமான கொரோனாத் தொற்று 2020 இல் உலகளாவிய அடிப்படையில் மிக வேகமாகப் பரவியது. 2020 இன் பிற்கூற்றில் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு இறுதி மாதத்தில் மக்கள் பாவனைக்கு வந்துவிட்ட போதிலும், 2021 இலும் அதன் பாதிப்பு மிக மேசமாகவே இருந்தது. இன்றுவரை இந்தக் கொள்ளை நோய்க்குப் பலியானோரின் எண்ணிக்கை 56 இலட்சத்தை எட்டியுள்ளது. மரணங்கள் ஒருபுறம் இருக்க, இதனால் ஏற்பட்ட பொருளாதார இழப்பு இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தை விடவும் அதிகம் என்கின்றன புள்ளி விபரங்கள். நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் அரசாங்கங்கள் மேற்கொண்ட உள்ளிருப்பு மற்றும் ஊரடங்கு நடவடிக்கைகள் காரணமாக மக்களின் அன்றாட வாழ்க்கை முறையே மாறிப் போய் விட்டது. தடுப்பு மருந்தின் வருகையின் பின்னரும் நோய்ப் பரவல் கட்டுப்பாட்டுக்குள் வராத நிலையிலும், கொரோனாத் தீநுண்மியின் உருமாறல்கள் காரணமாகவும் 2 வருடங்களைக் கடந்தும் அச்ச நிலையிலேயே வாழும் நிலையில் மக்கள் உள்ளனர்.
தங்களை நட்டத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக அரசாங்கங்களிடம் இருந்து நட்ட ஈட்டையும், இலகுக் கடன்களையும், கடன் தள்ளுபடிச் சலுகைகளையும் பெற்றுக் கொண்ட பெரு நிறுவனங்களும், சிறு நிறுவனங்களும் தம்மை ஓரளவு காத்துக் கொண்டாலும் பணிக் குறைப்புச் செய்வதை அவை கைவிடவில்லை. மறுபுறம், முறைசாராத் துறைகளில் பணியாற்றிய பல இலட்சக் கணக்கான தொழிலாளர்கள் தமது தொழிலை இழந்ததுடன் வருமானத்தையும் இழந்தனர்.
இவ்வாறு இந்த வருடத்தில் வேலை இழப்பவர்கள் 52 மில்லியன் முழு நேர வேலை செய்யும் நபர்களுக்குச் சமமானவர்களாக இருக்கக் கூடும் என்கிறது ஆய்வு. கடந்த வருடம் மே மாதத்தில் இதேபோன்றதொரு எதிர்வு கூறல் வெளியிடப்பட்டிருந்தது. அப்போது 2022ஆம் ஆண்டில் இந்தத் தொகை 26 மில்லியனாக இருக்கும் எனக் கூறப்பட்டிருந்தது. மக்கட் தொகை அடிப்படையில் தொழிலை இழப்போரின் எண்ணிக்கை 205 மில்லியனாக இருக்கும் எனக் கூறப்பட்டிருந்தது. தற்போது ஆறு மாதங்களின் பின்னர் வெளிவந்துள்ள ஆய்வு முடிவு, தொழில் இழப்போரின் எண்ணிக்கையை இரட்டிப்பாக மாற்றியுள்ளதை அவதானிக்கலாம்.
தடுப்பூசி பெற்றுக் கொண்ட பின்னரும் கொரோனாத் தொற்று தீவிரமாக இருப்பதும், மக்களுள் ஒரு சாரார் இன்னமும் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வதில் ஆர்வமின்றி இருப்பதும், டெல்ரா, ஒமைக்ரோன் என தன்னைத் திரிபுக்கு உட்படுத்திக் கொள்ளும் தீநுண்மி வேகமாகப் பரவுவதும் இதற்கான காரணங்களாக உள்ளன. அதேவேளை, செல்வந்த நாடுகளில் மூன்றாவது தடவை, நான்காவது தடவை எனத் தடுப்பூசிகள் ஏற்றிக் கொள்ளப்படும் போது, உலகின் வறிய நாடுகள் பல இன்னமும் போதிய தடுப்பூசிகள் இன்றி இருப்பதைக் காண முடிகின்றது. ஒருசில தொழிற்துறைகள் குறிப்பாக உல்லாசப் பயணத் துறை, உணவு விடுதிச் சேவை நிறுவனங்கள் போன்றவை பழைய நிலைக்குத் திரும்ப முடியாத நிலையில் அத் துறைகளில் பாரிய அளவில் தொழில் இழப்பு ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.
சர்வதேச தொழிலாளர் நிறுவனம் மேற்கொண்ட இந்த ஆய்வு உலகளாவிய அடிப்படையிலும், பிராந்தியங்களின் தரவுகளைக் கொண்டும் மேற்கொள்ளப்பட்டிருந்தது. தொழில் வய்ப்பு, தொழில் இழப்பு, தொழிலாளர் பங்குபற்றல், தொழிலின் தன்மைகள், தற்காலிகப் பணிகள், மரபுசாரா வேலைகள் என்பவை கொவிட்-19 தொற்றுக்கு முன்னரும், பெருந் தொற்றுக் காலத்திலும் எவ்வாறு இருந்தன என்பதை ஆய்வுக்கு உட்படுத்தியே குறித்த முடிவுகள் எட்டப்பட்டிருந்தன.
உலகளாவிய தொழில் இழப்புச் சுட்டி, கொரோனாப் பெருந் தொற்று அறிமுகமான 2019இல் 5.4 விழுக்காடாக இருந்தது. இது 2020இல் 6.6 விழுக்காடாகவும் 2021 6.2 விழுக்காடாகவும் இருந்தது. 2022இல் இது 5.9 விழுக்காடாக இருக்கும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. முன்னைய வருடங்களோடு ஒப்பிடுகையில் இது குறைவடைந்துள்ள போதிலும் 2019 உடன் ஒப்பிடுகையில் இது அதிகமாகவே உள்ளதைப் பார்க்க முடிகின்றது.
எதிர்பாராமல் வந்துவிட்ட பெருந் தொற்றைச் சமாளித்து அதிலிருந்து மீள்வதற்கு உலகம் முழுவதும் முயற்சிகள் மேற்கொள்ளப்படவே செய்கின்றன. ஆனால், அதிலும் கூட உலகில் சமத்துவமற்ற நிலையே காணப்படுகின்றது. தற்போதைய நிலையில் செல்வந்த நாடுகள் அதிகம் உள்ள ஐரோப்பாக் கண்ட நாடுகளும் வட அமெரிக்கப் பிராந்திய நாடுகளுமே பொருளாதாரச் சரிவிலிருந்து துரிதமாக மீண்டு வருகின்றன. தெற்கு – கிழக்கு ஆசியா, லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் பிரதேச நாடுகள் இது விடயத்தில் பின்னடைவையே சந்தித்துள்ளன. தனித்தனி நாடுகளாக நோக்குமிடத்து, தேசிய மட்டத்தில் அதிக வருமானம் உடைய நாடுகள் துரிதமாக மீட்சி கண்டு வருவதையும், குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் உடைய நாடுகள் பின்னடைவைச் சந்தித்து வருவதையும் அவதானிக்க முடிகின்றது.
இன்றைய போக்கு தொடருமா, இல்லையேல் நிலைமையில் மாற்றம் உருவாகி உலகு மீண்டும் பழைய நிலைமைக்குத் திரும்பவும் வந்து பொருளாதார வளர்ச்சியை எட்டுமா என்பவை போன்ற விடயங்கள் பொறுத்திருந்தே பார்க்கப்பட வேண்டியவை. உலகம் ஒரு பூகோளக் கிராமமாகி விட்டது எனப் பெருமை பேசும் நிலையில் கொரோனாக் கொள்ளை நோய்த் தடுப்பு விடயம் கூட தனித்தனி நாடுகளின் வல்லமைக்கு உரிய விடயமாகக் குறுகிப் போய் உள்ளமையைப் பார்க்க முடிகின்றது. கொரரோனாக் காலகட்ட அல்லது கொரோனாவுக்குப் பிந்திய பொருளாதார வளர்ச்சியும் கூட தனித்தனி நாடுகளின் விவகாரம் எனப் பார்க்கப்படுமேயானால் பொருளாதார மீட்சி என்பது ஒருசில நாடுகளுக்கு எட்டாக் கனியாகவே அமையும் என எதிர்வுகூற ஆய்வுகள் தேவையில்லை என்பதே யதார்த்தம். இதனை நன்குணர்ந்து செயற்பட வேண்டியவை வளர்முக நாடுகள் அல்ல, வளர்ந்த நாடுகளே.
ஆனால், கொரோனாப் பெருந் தொற்றுக் காலத்தை வளர்ந்த நாடுகள் கையாளுகின்ற விதத்தைப் பார்க்கும் போது அதற்கான வாய்ப்புகள் இல்லையெனவே தென்படுகின்றது. கொரோனாத் தடுப்பூசித் தயாரிப்பின் பின்னர் பெருமருந்து நிறுவனங்கள் ஈட்டும் வருமானம் பல மடங்கு பெருகியுள்ளதை புள்ளி விபரங்கள் உணர்த்துகின்றன. அது மாத்திரமன்றி, இந்தக் காலப் பகுதியில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதையும் காண முடிகின்றது. ஒவ்வொரு 26 மணித்தியாலத்தில் ஒரு புதிய கோடீஸ்வரர் உலகில் உருவாகி வருகிறார். உலகின் முதல் 10 செல்வந்தர்களின் சொத்து மதிப்பு இரு மடங்காக உயர்ந்துள்ளது. அவர்களின் சொத்து நிமிடத்துக்கு 15,000 அமெரிக்க டொலர் என்ற விகிதத்தில் உயர்ந்து வருவதாகச் சொல்லப்படுகின்றது.
இது தவிர, உலக வங்கியிடம் கையேந்தி நிற்கும் எண்பது வரையான நாடுகள் கடனைப் பெறுவதற்காக உள்நாட்டில் பல சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளன. அவ்வாறான நிலையில் சாமானிய மக்களே பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்பது உண்மை. கொரோனாப் பெருந் தொற்றில் இருந்து மீண்டாலும், உலக வங்கியின் கடன் பொறியில் இருந்து மீள்வது கடினமாகவே இருக்கப் போகின்றது.