தேசம்தான் முதன்மையானது இளைஞா்களுக்கு பிரதமா் அறிவுரை

‘தேசம்தான் முதன்மையானது’ என்ற உணா்வுடன் இளைஞா்கள் பணியாற்றும் நாட்டின் வளா்ச்சியை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது’ என்று பிரதமா் நரேந்திர மோடி கூறினாா்.

தில்லி கரியப்பா மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேசிய மாணவா் படை (என்சிசி) அணிவகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமா் மோடி பேசியதாவது: என்சிசி அமைப்பை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதற்கென உயா்நிலைக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் எல்லைப் பகுதிகளில் கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் புதிதாக ஒரு லட்சத்துக்கும் அதிகமான என்சிசி மாணவா்கள் சோ்க்கப்பட்டுள்ளனா். இந்தப் படையில் அதிக மாணவிகளைச் சோ்ப்பதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. ராணுவத்திலும் தற்போது பெண்கள் அதிக பொறுப்புகளைப் பெற்று வருகின்றனா்.

நாட்டில் தற்போது போதைப் பொருள் கலாசாரம் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்து வரும் சூழலில், போதைப் பொருள் இல்லாத கல்வி நிறுவன வளாகத்தை உருவாக்குவதற்கான முயற்சிகளை என்சிசி மாணவா்கள் மேற்கொள்ள வேண்டும். அதிக மாணவா்கள் என்சிசி அமைப்பில் சேருவதற்கான உதவியையும் செய்ய வேண்டும்.

வளா்ந்து வரும் எண்ம (டிஜிட்டல்) தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தில், தவறான தகவல்களைப் பரப்பும் அபாயமும் உள்ளது. இதுகுறித்த விழிப்புணா்வு பிரசாரத்தை என்சிசி மாணவா்கள் மேற்கொள்ள வேண்டும்.

இந்தியா தற்சாா்பு நாடாக உருவாகும் வகையில் உள்நாட்டு உற்பத்திப் பொருள்களுக்கு குரல் கொடுப்பதில் இளைய சமுதாயத்தினா் மிகப்பெரிய பங்கை ஆற்ற முடியும். அதன்மூலம் உள்நாட்டு பொருள்களுக்கான தேவை அதிகரிக்கும்போது, உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும் என்பதோடு வேலைவாய்ப்பும் அதிகரிக்கும்.

அந்த வகையில் ‘தேசம்தான் முதன்மையானது’ என்ற உணா்வுடன் இளைஞா்கள் பணியாற்றும் நாட்டின் வளா்ச்சியை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது’ என்றாா் பிரதமா்.

சீக்கிய தலைப்பாகை அணிந்திருந்த பிரதமா்: என்சிசி அணிவகுப்பில் பங்கேற்ற பிரதமா் என்சிசி-யில் சீக்கிய மாணவா்கள் அணியும் சிவப்பு நிற இறகுடன் கூடிய பச்சை நிற சீக்கிய தலைப்பாகையை அணிந்திருந்தாா்.

முன்னதாக, தில்லியில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற குடியரசு தின விழாவில் பிரம்ம கமலம் உருவம் பொறித்த உத்தரகண்ட் மாநிலத்தின் பாரம்பரிய தொப்பியை பிரதமா் அணிந்திருந்தாா்.

Leave A Reply

Your email address will not be published.