வால்பாறை சத்துணவு கூடத்தில் குட்டியானை சடலம்.. வனத்துறை தீவிர விசாரணை
கோவை மாவட்டம் வால்பாறையில் பயன்பாட்டில் இல்லாத சத்துணவு கூடத்தினை வாக்கு சாவடி அமைக்க திறந்த போது அங்கு இருத்த குட்டியானையின் எலும்புகூடுகள் மீட்கப்பட்டுள்ளது. இது குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியில் நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்காக வாக்குசாவடி அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் வாக்குசாவடி அமைப்பதற்காக வெள்ளிகிழமை , வால்பாறை அருகில் உள்ளஹைபாரஸ்ட் எஸ்டேட்டில் உள்ள பயன்பாட்டில் இல்லாத கட்டிடத்தை நகராட்சி அதிகாரிகள் இன்று திறந்துள்ளனர். அப்போது சத்துணவு மையத்தின் வளாகத்தில் குட்டியானையின் உடல் சிதிலமடைந்த நிலையில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
மேலும் அந்த சத்துணவு கூடத்தின் பின்புறபகுதியில் பெரிய ஓட்டை இருப்பதும் தெரிய வந்துள்ளது. இந்நிலையில் அங்கு வந்த வனத்துறையினர் யானையின் எலும்புகூடுகளை மீட்டனர். பல ஆண்டுகளாக பூட்டி கிடக்கும் இந்த சத்துணவு மையத்தில் குட்டியானை ஓட்டை வழியாக புகுந்த பின் வெளியேற முடியாமல் உயிரிழந்து இருக்ககூடும் என வனத்துறையினர் கருதுகின்றனர்.
சத்துணவு கூடத்தில் அரிசி சாப்பிடுவதற்காக நுழைந்த குட்டி யானை வெளியேற முடியாமல் இறந்து போயிருக்கலாம் எனவும், யானை இறந்து பல மாதங்கள் ஆகியிருக்க கூடும் எனவும் வனத்துறையினர் சந்தேகிக்கின்றனர். குட்டியானையின் எலும்பு கூடுகளை கைபற்றிய வனத்துறையினர் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சமபவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், விசாரணையின் முடிவிலேயே யானையின் உயிரிழப்புக்கான காரணம் தெரிய வரும் என கோவை மண்டல கூடுதல் தலைமை வனப்பாதுகாவலர் ராமசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். உள்ளாட்சி தேர்தலுக்கு வாக்குசாவடி அமைக்க சத்துணவு கூடத்தை திறந்த போது யானை குட்டியின் எலும்புகூடு மீட்கப்பட்டது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.