கரிப்பட்டமுறிப்பு பாடசாலை சமூகத்தினரால் தங்கம் வென்ற முல்லைத்தீவு யுவதிக்கான கௌரவிப்பு!
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புதிய நகர் கிராமத்தை சேர்ந்த யுவதி கணேஷ் இந்துகாதேவி பாக்கிஸ்தானில் நடைபெற்ற குத்துச்சண்டையில் தங்கப்பதக்கம் வென்றிருந்தார்.
குறித்த யுவதிக்கான கௌரவிப்பு நிகழ்வுகள் பரவலாக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் (01) குறித்த யுவதி க்கான கௌரவிப்பு நிகழ்வினை ஒட்டுசுட்டான் பிரதேசத்திற்கு உட்பட்ட கரிப்பட்ட முறிப்பு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை ஏற்பாடு செய்திருந்தது.
அந்தவகையில் இன்று காலை 9 மணிக்கு கரிப்பட்ட முறிப்பு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை வளாகத்தில்
கரிப்பட்ட முறிப்பு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை சமூகம் மற்றும் 642 ஆவது படைப்பிரிவு இணைந்து நடத்திய இந்த நிகழ்வில் தங்கம் வென்ற யுவதி தச்சடம்பன் கிராமத்தில் இருந்து குறித்த பாடசாலை வரை வாகன ஊர்வலமாக அழைத்துவரப்பட்டு கரிப்பட்ட முறிப்பு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவர்ளின் பான்ட் வாத்திய அணிவகுப்பு மரியாதையையுடன் பாடசாலை வளாகத்துக்குள் அழைத்துவரப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளார்.
கரிப்பட்ட முறிப்பு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை முதல்வர் ந.சர்வேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் துணுக்காய் வலயக்கல்விப் பணிப்பாளர் திருமதி மாலினி முகுந்தன், 59வது படைப்பிரிவின் கட்டளை தளபதி ஜி.டி .சூரிய பண்டார உள்ளிட்ட இராணுவ அதிகாரிகள், துணுக்காய் வலயக்கல்விப் பணிமனை அதிகாரிகள், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் நலன்விரும்பிகள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளார்கள்.
மிகவும் பின்தங்கிய கிராமத்தில் இருந்து தனது திறமையினை வெளிக்காட்டிய மாணவிக்கு பாடசாலை சமூகத்தினால் பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து நினைவு கேடயமும் பண பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டதோடு துணுக்காய் வலயக்கல்வி அலுவலக பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகளாலும் பதக்கம் அணிவித்து கௌரவிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 18 ம் திகதி பாகிஸ்தான் நாட்டில் இடம்பெற்ற இரண்டாவது பாகிஸ்தான் சிறீலங்கா சவேட் குத்துச்சண்டை சம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை அணிசார்பில் பங்கேற்ற முல்லைத்தீவு யுவதி கணேஸ் இந்துகாதேவி என்ற யுவதி பெண்களுக்கான 25 வயதுக்குட்ப்பட்ட 50-55 கிலோகிராம் எடைப்பிரிவில் போட்டியிட்டு தங்கப்பதக்கத்தை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.