கர்ப்பிணி பெண்களுக்கான ரூ.5,000 உதவித் தொகை திட்டத்தில் மாற்றம்!
மாற்றியமைக்கப்பட்ட பிஎம்எம்விஒய் (PMMVY) திட்டத்தில் கணவரின் ஆதார் கட்டாயமில்லை என மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.
முதல் குழந்தை பிரசவத்தின்போது, சில நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு (PW&LM), மத்திய அரசால் செயல்படுத்தப்படும் பிரதமரின் தாய்மையைப் போற்றுவோம் (PMMVY) எனப்படும் திட்டத்தின் மூலம் பேறுகால உதவியாக ரூ.5,000/- வழங்கும் திட்டத்தை, மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின்கீழ் பேறுகால உதவித்தொகை பெற விரும்பும் பயனாளி, அவரது மற்றும் அவரது கணவரின் ஆதார் விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையால், தாய்மார்கள் அல்லது கர்ப்பிணிப் பெண்களுக்காக செயல்படுத்தப்படும் பிற திட்டங்களுக்கு, இதுபோன்ற விவரங்களைத் தெரிவிக்க வேண்டியதில்லை.
பிரதமரின் தாய்மையைப் போற்றுவோம் திட்டம், ஒடிசா மற்றும் தெலங்கானா தவிர்த்த பிற அனைத்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. புலம்பெயரும் தொழிலாளர்கள், எந்தவொரு மாநிலம்/ யூனியன் பிரதேசத்திலும் இத்திட்டச் சலுகையைப் பெறலாம்.
இத்திட்டத்தில் பதிவு செய்வதற்கு, பயனாளி தமது சம்மதத்தையும், தமது கணவரின் சம்மதத்தையும் எழுத்துப்பூர்வமாக சமர்ப்பித்தால் தான், சலுகைகளைப் பெற முடியும்.
மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையால் செயல்படுத்தப்படும் மத்திய அரசின் திட்டங்களை, நித்தி ஆயோக்கின் வளர்ச்சி மற்றும் கண்காணிப்பு மதிப்பீட்டு அலுவலகம், மதிப்பீடு செய்து அளித்த பரிந்துரைகள் பரிசீலிக்கப்பட்டன.
அதன்படி, கைவிடப்பட்ட தாய் மற்றும் தனியாக வசிக்கும் தாய்மார்கள், கணவரின் எழுத்துப்பூர்வ சம்மதம் மற்றும் ஆதார் விவரங்களை சமர்ப்பிப்பது கட்டாயமில்லை என பிரதமரின் தாய்மையைப் போற்றுவோம் திட்டத்திற்கான மாற்றியமைக்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக, மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.