வாவா சுரேஷின் உடல்நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை தகவல்!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் வாவா சுரேஷ். பாம்பு பிடிப்பதில் வல்லவரான இவர் இதுவர சுமார் 50,000க்கும் மேற்பட்ட பாம்புகளை லாவகமாக பிடித்துள்ளார். இதனிடையே, கோட்டயம் அருகே குரிச்சியில் ஒரு வீட்டிற்குள் நல்ல பாம்பு ஒன்று பதுங்கி இருப்பதாகவும், அதனை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைக்கக்கோரி பிரபல பாம்பு பிடி மன்னன் வாவா சுரேஷுக்கு தகவல் வந்துள்ளது.

அதன்படி, அந்த வீட்டுக்கு விரைந்து சென்ற வாவா சுரேஷ், அங்கு பதுங்கியிருந்த நல்ல பாம்பை பிடித்து சாக்கில் போட்டு கட்ட முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக அந்த பாம்பு வாவா சுரேஷின் வலது காலில் கடித்தது. அதன் தொடர்ச்சியாக, சிறிது நேரத்தில் வாவா சுரேஷ் மயங்கி விழுந்தார்.

இதையடுத்து, அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக கோட்டயம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அவர் அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவர் விரைவில் குணமடைய வேண்டும் என பலரும் பிரார்த்தனை செய்து வந்தனர்.

இந்த நிலையில், பாம்பு கடித்து ஆபத்தான நிலையில் கோட்டயம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாம்பு பிடி நிபுணர் வாவா சுரேஷின் உடல்நிலையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது.

அவர் வென்டிலேட்டர் இல்லாமல் சுயமாக சுவாசிக்க ஆரம்பித்துவிட்டதாகவும், அழைப்புகளுக்கு பதிலளித்து வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இருப்பினும், அவர் இன்னும் சில காலம் வென்டிலேட்டரில் இருப்பார் எனவும், அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மூளைக்கு ரத்த ஓட்டம் இயல்பு நிலைக்கு திரும்புவதில் முன்னேற்றம் காணப்படுகிறது. பாம்பு விஷம் உடலில் நுழைந்த பிறகு, மிக முக்கியமான நேரம் 24 முதல் 48 மணிநேரம் ஆகும். எனவே, வாவா சுரேஷ் இது வரை வென்டிலேட்டர் உதவியில் இருப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.