பிரதமர் மோடி ராணுவ சீருடையை அணிந்தது சட்டப்படி குற்றம்’ – உ.பி நீதிமன்றம் நோட்டீஸ்
பிரதமர் நரேந்திர மோடி ராணுவ உடையை அணிந்தது சட்டப்படி குற்றம் என்று கூறியுள்ள உத்தரப்பிரதேச மாவட்ட நீதிமன்றம், இதுதொடர்பாக விளக்கம் அளிக்கக்கோரி பிரதமர் அலுவலகத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பிரதமர் மோடி கடந்த ஆண்டு காஷ்மீரில் நடைபெற்ற நிகழ்ச்சியின்போது ராணுவ சீருடைய அணிந்தது தொடர்பான வழக்கு, உத்தரப்பிரதேச மாநிலம் பிரக்யாராஜ் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது.
ராகேஷ் நாத் பாண்டே என்ற வழக்கறிஞர், பிரதமர் மோடி ராணுவ சீருடைய அணிந்தது இந்திய தண்டனை சட்டம் பிரிவு 140-ன் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும் என்று கூறி, வழக்கு தொடர்ந்திருந்தார். கடந்த ஆண்டு இந்த வழக்கு தொடரப்பட்டபோது, விசாரணை எல்லைக்கு இந்த வழக்கு உட்பட்டதல்ல என்று கூறி, அப்போதைய மாவட்ட தலைமை நீதிபதி ஹரேந்திர நாத் மனுவை தள்ளுபடி செய்தார்.
இதன்பின்னர், குற்றவியல் விசாரணை சட்டம் பிரிவு 156(3)-ன் கீழ், மனுதாரர் மீண்டும் மனுத்தாக்கல் செய்தார். இந்தப்பிரிவு வெளிப்படையாக தெரியும் குற்றங்களை விசாரிப்பதற்கு மாவட்ட நீதிபதிக்கு அதிகாரம் அளிக்கிறது. இதன் அடிப்படையில், நீதிபதி நளின் குமார் ஸ்ரீவஸ்தவா விளக்கம் கேட்டு பிரதமர் அலுவலகத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அடுத்ததாக இந்த வழக்கின் விசாரணை மார்ச் 2-ம்தேதி நடைபெறவுள்ளது.
பிரதமர் மோடி கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை, ஜம்மு காஷ்மீரில் உள்ள நவ்ஷெரா பகுதியில் ராணுவ வீரர்களுடன் கொண்டாடினார். அப்போது அவர் இந்திய ராணுவ சீருடையை அணிந்திருந்தார்.