பாஜக கூட்டணியை மறுபரிசீலனை செய்யுங்கள்… ரங்கசாமிக்கு ஆலோசனை கூறிய திமுக
7புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி பாஜக கூட்டணியை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என திமுக ஆலோசனை வழங்கியுள்ளது. திமுக புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் காரைக்கால் மாவட்ட திமுக அமைப்பாளர் நாஜிம் இது குறித்து செய்தியாளர்களிடம் கூறுகையில், மத்திய பட்ஜெட்டில் தமிழகம், புதுச்சேரி முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டுள்ளது. பட்ஜெட் திருத்திய மதிப்பீட்டுக்கு மத்திய அரசு ரூ.150 கோடி மட்டுமே கூடுதலாக ஒதுக்கியுள்ளது. 6வது சம்பள கமிஷன் அமல்படுத்தியபோது இழப்பீடு வழங்கியது. 7வது சம்பள கமிஷன் அமல்படுத்தியதற்கு எந்த நிதியும் வழங்கவில்லை.
மழை சேதத்தை மத்தியக்குழு பார்வையிட்டு நிவாரணம் வழங்க வேண்டும் என புதுச்சேரி அரசு கோரியிருந்தது. இதைப்பற்றி எந்த அறிவிப்பும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. ஏற்கனவே பல துறை சார்ந்த ஊழியர்கள் சம்பளம் இல்லாமல் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில், அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டத்தையும் தொடங்கியுள்ளனர். ஆட்சி மாறினாலும், காட்சி எதுவும் மாறவில்லை. சிறிய பணிகள்கூட நடைபெறவில்லை. இதனால் புதுச்சேரி மக்கள் நம்பிக்கையிழந்து வருகின்றனர். கூட்டணியில் இருந்தாலும் புதுச்சேரிக்கென மத்திய அரசு எதையும் வழங்க தயாராக இல்லை. எனவே பாஜக கூட்டணியை முதல்அமைச்சர் ரங்கசாமி மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் பாஜகவுடன் கூட்டணியை அமைத்து தேர்தல் சந்தித்த மாநில கட்சியான நமது ராஜ்ஜியம் எனப்படும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி 10 இடங்களையும் பாஜக 6 இடங்களையும் பெற்று சுயேட்சைகள் 6 பேரின் ஆதரவுடன் ஆட்சி நடத்தி வருகிறது. எதிரணியில் திமுக 6 இடங்களையும் காங்கிரஸ் இரண்டு இடங்களையும் பெற்றுள்ளன.
மத்திய பாஜக அரசு, புதுச்சேரி அரசுக்கு எந்த உதவியும் செய்ய மறுக்கிறது. பிரதமரை நேரடியாக ரங்கசாமி இன்னும் சந்திக்கவில்லை. அப்படி சந்தித்தால் தான் புதுச்சேரிக்கு எதுவும் நடக்கும். அதுவரை ஒரு துரும்பை கூட மத்திய அரசு எடுத்து போடாது என்பது பாஜகவினரின் வாதம். டெல்லிக்கு செல்வதென்றால் முதல்வர் ரங்கசாமிக்கு பயம் என காங்கிரஸ் அடிக்கடி அடக்கமாக கிண்டல் செய்கிறது. இதையும் நேரடியாகவே முதல்வர் ரங்கசாமியை செய்தியாளர்கள் கேட்டு விட்டனர்.
பிரதமரை பார்க்க முதல்வருக்கு பயமா..? ஏன் டெல்லி செல்வதில்லை என கேட்டதற்கு, “பிரதமர் எனது நெருங்கிய நண்பர். கொரோனா முடிந்தவுடன் அவரை நிச்சயம் பார்ப்பேன்” என பதிலளித்த முதல்வருக்கே டெல்லி செல்லும் தேதி எப்போது என்பது தெரியும்.
ஆனால் பாஜகவின் நெருக்கடியை பயன்படுத்தி கொள்ள திமுக முயற்சிக்கிறது. பாஜகவிற்கு இணையாக 6 தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்களை திமுக கொண்டிருக்கிறது. பாஜகவை விட்டு என்.ஆர்.காங் வெளியேறினால் ஆதரவு கரம் நீட்ட தயாராக இருக்கிறது உள்ளூர் திமுக.
தமிழகத்தை போல் புதுச்சேரியிலும் ஆளுங்கட்சியாகலாம் என ஆசைப்படுகிறது திமுக. கடந்த சட்டமன்ற தேர்தலில் ரங்கசாமியுடன் கூட்டணி வைக்க திமுக விரும்பியது. ஆனால் பல நெருக்கடியால் பாஜகவுடன் சேர்ந்தார் ரங்கசாமி. இந்த நிலையில் பாஜகவை விட்டு வெளியேறினால் ஆதரவு தர. உள்ளூர் திமுக விரும்புகிறது. இதற்கு திமுக தலைமை சம்மதிக்குமா..? என்ற கேள்வி எழுந்துள்ளது.