கவுன்சிலர் பதவிக்கு திமுக முன்னாள் எம்.எல்.ஏ போட்டியிட்டதால் பரபரப்பு
தமிழகம் முழுவதும் நகர்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றனர் மனுத்தாக்கல் செய்யும் கடைசி நாளான இன்று உளுந்தூர்பேட்டை நகராட்சிக்கு உட்பட்ட 19வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.திருநாவுக்கரசு மற்றும் அதன் கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுடன் வந்து வேட்புமனு தாக்கல் செய்தார்.
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், அரசு வழக்கறிஞர், வழக்கறிஞர் சங்கத் தலைவர் உட்பட பல உயர் பொறுப்புகளில் வகித்து வந்த திருநாவுக்கரசு தற்போது கட்சியில் முக்கிய பொறுப்புகள் கிடைக்காமலும் மாவட்ட நிர்வாகிகளால் ஓரம் கட்டப்பட்டதாலும் நடைபெற உள்ள நகராட்சி தேர்தலில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தது அரசியல் கட்சியினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதேபோல் திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு திமுக கூட்டணியில் ஒரு இடம் ஒதுக்கப் பட்டுள்ள நிலையில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்ட கட்சியின் நிர்வாகிகள் 3 பேர் சுயேட்சையாக போட்டியிட வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளனர். இதுவும் திமுக கூட்டணி கட்சிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.