பிரதமர் மோடி திறந்து வைக்கும் ஸ்ரீராமானுஜசாரியா சிலை குறித்த சுவாரஸ்யமான தகவல்கள்!
11ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வைணவ சமய துறவி ஸ்ரீ ராமானுஜசாரியாவின் சிலையை ஹைதராபாத்தில், பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை திறந்து வைக்கிறார். சனிக்கிழமை மாலை 5 மணி அளவில் சிலை திறப்பு விழா நடைபெறுகிறது.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடு மற்றும் உலகெங்கிலும் இருந்து பல்வேறு சிறப்பு விருந்தினர்களுக்கு இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
’சமத்துவத்திற்கான சிலை’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த சிலை குறித்த சுவாரசியமான தகவல்களை இங்கு தெரிந்து கொள்ளலாம்.,
ஹைதராபாதில் உள்ள சின்ன ஜீயர் சுவாமி ஆசிரமத்துக்கு சொந்தமான 40 ஏக்கர் பரப்பளவிலான நிலத்தில் சுமார் 216 அடி உயரத்தில் இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது.
அமர்ந்த நிலையில் உள்ள உயரமான சிலைகளில், சமத்துவத்திற்கான சிலை இரண்டாம் இடத்தில் உள்ளது என்று ஜீயர் கல்வி அறக்கட்டளையின் அதிகாரி சூரியநாராயண யல்லபிரகதா தெரிவித்தார்.
ராமானுஜரின் 1,000ஆவது பிறந்த தினத்தை கொண்டாடும் வகையில் இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது.
ரூ.1,000 கோடி மதிப்பீட்டில்தங்கம், வெள்ளி, காப்பர், பிராஸ் மற்றும் டின் ஆகிய ஐந்து வகை உலோகங்களால் இந்த சிலை உருவாக்கப்பட்டுள்ளது.
கடந்த 2017ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த சிலை கட்டுமான பணிகள், நிறைவு பெறுவதற்கு நான்கு ஆண்டுகளை எடுத்துக் கொண்டுள்ளது.
54 அடி உயரம் கொண்ட மூன்று அடுக்கு கட்டுமானத்தின் மீது மாபெரும் தாமரை அமைத்து அதன் மேலே இந்த சிலை அமர்ந்த நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
சிலைக்கு கீழே உள்ள கட்டடத்தின் தரைதளத்தில் 63,444 சதுர அடியில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு ராமானுஜரின் வாழ்க்கை மற்றும் அவரது தத்துவங்களை பிரதிபலிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இரண்டாம் தளத்தில் சுமார் மூன்று லட்சம் சதுர அடியில் ராமானுஜரின் கோவில் அமைந்துள்ளது. அங்கு தினசரி வழிபாட்டுக்காக 120 கிலோ தங்கத்திலான அவரது சிலை நிறுவப்பட்டுள்ளது.
மூன்றாவது தளத்தில் 14,700 சதுர அடியில் வேதிக் டிஜிட்டல் நூலகமும், ஆராய்ச்சி மையமும் இடம்பெற்றுள்ளது.
தாமரை இடம்பெற்றுள்ள பகுதிக்கு பத்ராவதி என்று பெயரிடப்பட்டுள்ளது. சிலையை சுற்றியுள்ள 34 ஏக்கர் பரப்பளவில் 108 திவ்ய தேசங்களின் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன.
ஒட்டுமொத்த உலகுக்கும் இந்த சிலை பொதுவானது என்பதை உணர்த்தும் வகையில் சிலைக்கு அருகே அனைத்து நாடுகளின் கொடிகளும் ஏற்றப்படும் என்று ஆசிரம நிர்வாகிகள் தெரிவித்தனர். வாழ்வியல், நம்பிக்கை, ஜாதி, சமயம் உள்ளிட்ட அனைத்திலும் சமத்துவத்தை போதித்த ராமானுஜரை போற்றும் விதமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
இந்த சிலை சின்ன ஜீயர் சுவாமிகளின் முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது.