திமுக எம்.எல்.ஏவின் கல கல கடலை பிரச்சாரம்!!

புதுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட 25வது வார்டில் திமுக சார்பில் போட்டியிடும் திலகவதி செந்திலை ஆதரித்து தள்ளுவண்டியில் கடலை வறுத்து நூதன முறையில் புதுக்கோட்டை திமுக சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா தீவிரமாக வாக்கு சேகரித்தார்.

புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட 42 வார்டுகளிலும் தேர்தல் பிரச்சாரம் களைகட்டி வருகிறது. அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட 25வது வார்டு திமுக சார்பில் போட்டியிடும் திலகவதி செந்திலை ஆதரித்து புதுக்கோட்டை திமுக சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா அந்த வார்டுக்கு உட்பட்ட சாந்தநாதபுரம் ஒன்றாம் வீதி, இரண்டாம் வீதி உள்ளிட்ட பகுதிகளில்‌ வீடு வீடாக சென்று துண்டு பிரசுரம் வினியோகம் செய்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது அந்த பகுதியில் தள்ளுவண்டியில் கடலை விற்று வந்தவரிடம் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் கேட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா கடலை வறுத்தவரிடம் கரண்டியை வாங்கி கடலை வறுத்து கட்சியினருக்கும் பொதுமக்களுக்கும் கடலையை வழங்கி நூதன முறையில் பிரச்சாரம் செய்தார்.

சட்டமன்ற தேர்தலில் புதுக்கோட்டை தொகுதியில் தன்னை வெற்றிபெற செய்ததைப்போல் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்யவேண்டும் என்று கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

பின்னர் கடலை வியாபாரிக்கு பணம் கொடுத்த திமுக எம்.எல்.ஏ முத்துராஜா, ‘இந்த பணம் கடலைக்காக மட்டும் தான். நான் கடலை வாங்கியதற்காக மட்டும் தான் பணம் கொடுக்கிறேன்’ என விளக்கமாக கூறினார். இதனால் அங்கிருந்தவர்களிடையே சிரிப்பலை எழுந்தது.

Leave A Reply

Your email address will not be published.