தமிழகம் கேட்டது ரூ.6,230 கோடி: மத்திய அரசு கொடுத்தது ரூ.816 கோடி.. உள்துறை இணை அமைச்சர் ஒப்புதல்!!
தமிழகம் கேட்டது ரூ.6,230 கோடி, கொடுத்தது ரூ.816 கோடி என உள்துறை இணை அமைச்சர் ஒப்புதல் தெரிவித்துள்ளார்.
“தமிழ்நாடு அரசு கடந்த 2021 நவம்பர் மாதம் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்கள், பயிர் சேதங்கள், மனித உயிர்கள் மற்றும் கால்நடைகள் உயிரிழப்புகள் ஆகியவற்றை ஈடுகட்டுவதற்காக மத்திய அரசிடம் 6 ஆயிரத்து 230 கோடி ரூபாய் நிவாரணம் கேட்டு முறையீடு செய்திருக்கிறதா? அப்படி முறையிட்டிருந்தால் அதன்பேரில் மத்திய அரசு எடுத்த நடவடிக்கை என்ன?
வெள்ளச் சேதத்தை மத்திய குழுவினர் கடந்த நவம்பர் கடைசி வாரம் பார்வையிட்டு சென்ற நிலையில் அதன் அடுத்த கட்டமாக ஒன்றிய அரசு நிதி உதவியை விரைவில் அளிக்குமா?” என்று பிப்ரவரி 8ஆம் தேதி மக்களவையில் ஆ.ராசா, பாரிவேந்தர், ராமலிங்கம், கனிமொழி ஆகிய உறுப்பினர்கள் எழுத்துபூர்வமாக கேள்வி கேட்டிருந்தனர்.
இந்தக் கேள்விகளுக்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்தியானந்த ராய் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார். அதில்,”பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகளில் முதன்மையான பொறுப்பு சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்கே உள்ளது. இயற்கை சீற்றங்களின் போது மாநில அரசுகள் ஏற்கனவே இருப்பு வைக்கப்பட்டுள்ள மாநில பேரிடர் மேலாண்மை நிதியத்திலிருந்து உடனடி நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.
சாதாரணமான இயற்கை சீற்றங்கள் என்றால் உடனடி நிதி உதவிகளும், கடுமையான இயற்கை சீற்றம் என்றால் மத்தியக் குழு பார்வையிட்டு அதன் அடிப்படையிலான கூடுதல் நிதி உதவிகள் தேசிய பேரிடர் மேலாண்மை நிதியத்தில் இருந்து விதிமுறைகளின்படி வழங்கப்படும்.
2021 அக்டோபர் நவம்பர் மாதங்களில் தமிழ்நாட்டில் ஏற்பட்ட கடுமையான மழை பொழிவு வெள்ளச் சேதம் பற்றி மதிப்பீடு செய்ய மத்திய குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு நவம்பர் 21 முதல் 24 ஆம் தேதி வரை வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டது.
முதலில் தமிழ்நாடு அரசு வெள்ள பாதிப்புகளை எதிர்கொள்வதற்காக 2629.29 கோடி ரூபாயை நிவாரணத் தொகை யாக கேட்டது. அதில் 549.63 கோடி ரூபாயை உடனடி நிவாரணமாகவும் மீதமுள்ள 2079.66 கோடி ரூபாயை நிரந்தர மறு சீரமைப்பு பணிகளுக்காகவும் கேட்டது.
மத்திய குழுவின் தமிழ்நாடு வருகையின்போது மாநில அரசு இரண்டாவது முறையாக ஒரு முறையீட்டு மனுவை அளித்தது. அதில் 4625 கோடி ரூபாயை நிவாரணமாக கேட்டது. 1070 கோடி ரூபாய்களை தற்காலிக நிவாரணப் பணிகளுக்காக 3554 கோடி ரூபாய்களை நிரந்தர மறு சீரமைப்பு பணிகளுக்காகவும் தமிழ்நாடு அரசு கோரியது.
இந்நிலையில், 21 -12 -2021 அன்று தமிழ்நாடு மாநில அரசு மூன்றாவதாக ஒரு முறையீட்டு மனுவை அளித்தது. அதில் திருத்தி அமைக்கப்பட்ட நிதி உதவியாக 6230.45 கோடி ரூபாய்களை நிவாரண உதவியாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியது. இதில் 1510.83 கோடி ரூபாய்கள் உடனடி நிவாரணத்துக்காக 4719.62 கோடி ரூபாய் நிரந்தர மறுசீரமைப்புக்காவும் தமிழ்நாடு அரசு கேட்டது.
இதற்கிடையே மத்திய குழு தனது அறிக்கையை சமர்ப்பித்தது. விதிமுறைகளுக்கு உட்பட்டு தமிழ்நாட்டுக்கான கூடுதல் நிதி உதவிகள் பற்றி பரிசீலிக்கப்பட்டது. நடப்பு நிதியாண்டில் தமிழ்நாடுக்கு பேரிடர் மேலாண்மை நிதியாக 1088 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் ரூ.816 கோடி மத்திய அரசின் பங்காகவும் 272 கோடி ரூபாய் மாநில அரசின் பங்காக இருக்கும். மத்திய அரசின் பங்கான 816 கோடி ரூபாய் தலா 408 கோடி ரூபாய் என இரண்டு தவணைகளாக விடுவிக்கப்பட்டுள்ளது” என்று உள்துறை இணை அமைச்சர் நித்தியானந்த ராய் பதில் அளித்துள்ளார்.