இந்தியாவுக்கு எதிராக பொய்ச் செய்திகளைப் பரப்பிய 60-க்கும் மேற்பட்ட சமூக ஊடக கணக்குகள் முடக்கம்
இந்தியாவுக்கு எதிராக பொய்யான செய்திகளைப் பரப்பியதற்காக கடந்த இரண்டு மாதங்களில் யூ டியூப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்பட 60க்கும் மேற்பட்ட சமூக ஊடகங்களின் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
மாநிலங்களவையில் துணைக் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் எல்.முருகன் கூறியதாவது: மக்களின் பேச்சு சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் குறித்து அரசு மிகுந்த அக்கறை கொண்டுள்ளது. பொய்யான செய்திகளைப் பரப்பியதாகவும், தேச விரோதமான விஷயங்களை வெளியிட்டதாகவும் யூ டியூப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட சமூக ஊடகங்களின் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. இந்த யூ டியூப் சேனல்கள் பாகிஸ்தானில் இருந்து ஒளிபரப்பப்பட்டவை என்றார்.
செய்தித்தாள்களில் வரும் பொய்யான செய்திகள் குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், இந்திய பிரஸ் கவுன்சில் ஒரு தன்னாட்சி அமைப்பாகும். இந்த அமைப்பு, பத்திரிகையாளர்களின் நெறிமுறைகளை கவனித்துக் கொள்கிறது.
பத்திரிகையாளர்கள் உரிய நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். பத்திரிகையாளர் கவுன்சில் சட்டம் பிரிவு 14-இன் கீழ் நெறிமுறைகளைப் பின்பற்றாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன்படி உரிய நெறிமுறைகளை பின்பற்றாத பத்திரிகை நிறுவனங்களின் மீது 150-க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டு நடவடிக்கை எடுத்துள்ளோம் என்றார்.
தவறான செய்திகளைப் பரப்புவதில் டெக்ஃபோக் செயலியின் பங்கு குறித்து அமைச்சரிடம் எழுப்பிய கேள்விக்கு, அரசு தற்போது உண்மைச் சரிபார்ப்பு பிரிவை நிறுவியுள்ளதன் மூலமாக 30,000 க்கும் மேற்பட்ட புகார்கள் விசாரிக்கப்பட்டுள்ளன. இந்த பிரிவு போலியாக பரப்பப்படும் செய்திகளை சரிபார்த்து வருகிறது என்றார்.
அரசின் அதிகாரபூர்வ அறிக்கையின்படி, டிஜிட்டல் மீடியாவில் ஒருங்கிணைந்த முறையில் இந்தியாவுக்கு எதிரான போலிச் செய்திகளைப் பரப்பி வந்த 35 யூடியூப் செய்தி சேனல்களையும், இரண்டு சமூக வலைத்தளங்களையும் முடக்கி வைக்க மத்திய அமைச்சகம் ஜனவரி 21இல் உத்தரவிட்டது. மேலும், 2 ட்விட்டர் கணக்குகள், 2 இன்ஸ்டாகிராம் கணக்குகள், ஒரு பேஸ்புக் கணக்கும் முடக்கப்பட்டன.