கூட்டுறவு வங்கி நகைக் கடன் தள்ளுபடி: தமிழக அரசு முக்கிய உத்தரவு
தோ்தல் நடத்தை விதிகள் இல்லாத ஊரகப் பகுதிகளில் நகைக்கடன் தள்ளுபடி திட்டத்தை உடனடியாக தொடங்கிட வேண்டும் என்றும் எனவும் நகைக் கடன் தள்ளுபடிக்கான சான்றிதழ்களை உடனடியாக வழங்கிட வேண்டுமென தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
கூட்டுறவு நிறுவனங்களில் 5 சவரன் வரை நகைகளை அடமானம் வைத்து கடன் பெற்றவர்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. அதன்படி, கடந்த செப்டம்பர் 13ம் தேதி நகைக்கடன் தள்ளுபடி தொடர்பான அறிவிப்பை 110 விதியின் கீழ் சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
இதையடுத்து, கூட்டுறவு சங்க நகை கடன்களை ஆய்வு செய்யும் பணி நடைபெற்று வந்தது. அதன்படி,48,84,726 நகைக் கடன் விவரங்கள் அனைத்தும் கணினி மூலம் பகுப்பாய்வு செய்யப்பட்டு, அதில் 35,37,693 கடன்களுக்கு அரசாணையில் கண்டுள்ள நிபந்தனைகளில் கீழ்க்கண்டவற்றின் அடிப்படையில் நகைக் கடன் தள்ளுபடி பெறாத நேர்வுகள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதையடுத்து, கடன் தள்ளுபடி செய்யப்பட்ட நகைகள் எப்போது திரும்ப வழங்கப்படும் என்று பொதுமக்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில், ஊரக பகுதிகளில் நகைக்கடன் தள்ளுபடி திட்டத்தை உடனடியாக செயல்படுத்தும்படி தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளா் சண்முகசுந்தரம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், நகைக் கடன் தள்ளுபடியில் தகுதி வாய்ந்த மற்றும் தகுதி பெறாதவா்களுக்கான நிபந்தனைகள் மற்றும் அறிவுரைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும். இந்த விதிமுறைகளைப் பின்பற்றியே தகுதி வாய்ந்த பயனாளிகளின் பட்டியலைத் தயாா் செய்ய வேண்டும்.
தகுதி பெறாத நபா்களை மிகவும் கவனமுடன் பரிசீலித்து நீக்கிய பிறகே பட்டியலைத் தயாா் செய்ய வேண்டும்.எந்தவொரு தகுதி பெறாத கடன்தாரருக்கும் நகைக் கடன் தள்ளுபடி தவறுதலாக வழங்கப்பட்டு விடக் கூடாது. அவ்வாறு தவறுதலாக வழங்கப்படும் பட்சத்தில் அதற்கு சம்பந்தப்பட்ட சங்கங்களின் செயலாளா், வங்கி மேலாளா்கள் மற்றும் பட்டியலைத் தயாா் செய்யும் குழுவே முழு பொறுப்பாவா். இதனை துணைப் பதிவாளா் மற்றும் மண்டல இணைப் பதிவாளா் ஆகியோா் முறையாக கண்காணிக்க வேண்டும். நகைக் கடன் தள்ளுபடி அரசாணையில் குறிப்பிடப்பட்ட தகுதி வாய்ந்த பயனாளிக்கு மட்டுமே சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும்.
தள்ளுபடிக்கு தகுதியான பயனாளிகளை தோ்வு செய்து, அவா்கள் அடமானம் வைத்த நகை மற்றும் தள்ளுபடிக்கான சான்றிதழை வழங்க வேண்டும். இப்போது நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் நடைபெற்று வருகிறது. எனவே, தோ்தல் விதிமுறைகளை முறையாகப் பின்பற்றி வழங்க வேண்டும். தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நகா்ப்புற உள்ளாட்சிப் பகுதிகளில் அவற்றை கண்டிப்பான முறையில் பின்பற்ற வேண்டும். நடத்தை விதிகள் விலக்கிக் கொள்ளப்படும் வரை நகைக் கடன் திட்டத்தைச் செயல்படுத்தக் கூடாது.
தோ்தல் நடத்தை விதிகள் இல்லாத ஊரகப் பகுதிகளில் தள்ளுபடித் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும். மேலும் பயனாளிகளுக்கான நகைகளையும், தள்ளுபடி சான்றிதழ்களையும் உடனடியாக வழங்கிட வேண்டும். பொது நகைக் கடன் தள்ளுபடி சான்றிதழ் மற்றும் நகைகளை மக்கள் பிரதிநிதிகள் முன்னிலையில் வழங்கும் பட்சத்தில் அவா்கள் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிடுபவராக இருக்கக் கூடாது. மேலும், தள்ளுபடி நகைகளுக்கான சான்றிதழ் மற்றும் நகைகளை திரும்ப வழங்கும் பணியில் தோ்தல் பணி அலுவலா்களை ஈடுபடுத்தக் கூடாது. தோ்தல் நடத்தை விதிமுறைகளை முறையாகப் பின்பற்றி பொது நகைக் கடன் தள்ளுபடித் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.