‘மேற்கு வங்கத்தைப் போல தமிழகத்திலும் சட்டமன்றத்தை முடக்கும் நிலை வரலாம்’ – எடப்பாடி பழனிசாமி
மேற்கு வங்க சட்டமன்றம் முடக்கப்பட்ட நிலை தமிழக சட்டமன்றத்திற்கும் எதிர்காலத்தில் வரலாம் என்று, திமுக அரசை அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி, சேலம் மாவட்டம் ஓமலூரில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது-
தேர்தல் அதிகாரிகள் நடு நிலைமையோடு செயல்பட வேண்டும். ஆளுங் கட்சிக்கு சாதகமாக அவர்கள் செயல்பட்டால் சட்ட ரீதியாக அதிமுக அதனை எதிர்கொள்ளும். எனவே, அதிமுக வேட்பாளர்கள் யாரும் அச்சம் கொள்ள வேண்டாம்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முறையாக நடத்த வேண்டும். அந்த நிலையை அதிமுக ஏற்படுத்திக் காட்டும். அதற்காகத்தான் நேற்றைய தினம் மேதகு ஆளுனரை முன்னாள் அமைச்சர்கள் சந்தித்து, தமிழ்நாட்டில் நடைபெறும் சம்பவங்களை எடுத்துக் கூறியுள்ளனர்.
ஆளுனரும், தேர்தல் ஆணையத்திடம் தகுந்த காரணங்கள் கேட்டுள்ளார்கள். ஆகவே நேர்மையான முறையில் தேர்தல் ஆணையம் இந்த தேர்தலை நடத்த வேண்டும். நடத்தாவிட்டால், நடக்க வைப்போம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்போது இருக்கிற திராவிட முன்னேற்ற கழகத்திற்கு, அதிமுகவை எதிர்க்கக்கூடிய திராணி, தில் இல்லை என்பதுதான் தெரிகிறது.
தேர்தல் அறிவித்து விட்டார்கள். அப்படியென்றால் மக்களை சந்தித்துதானே வாக்குகள் கேட்க வேண்டும். நான் முதலமைச்சராக இருந்தபோது நேரடியாக மக்களை சந்தித்து வாக்குகளை கேட்டோம். அந்த தெம்பு, திராணி திமுகவுக்கு இல்லை.
நேர்வழியில் திமுக ஆட்சியைப் பிடித்ததாக சரித்திரமே கிடையாது. மேற்கு வங்காளத்தில் என்ன நடந்திருக்கிறது? அங்கு மேதகு ஆளுனர், சட்டமன்றத்தை முடக்கி விட்டார். செயல்படாமல் ஆக்கி விட்டார். தொடர்ந்து தமிழகத்தில் ஆளுங்கட்சி முறைகேட்டில் ஈடுபட்டால் தமிழகத்திலும் எதிர்காலத்தில் அந்த நிலைமை ஏற்படும்.
இந்தியா முழுவதும் பெட்ரோல் டீசல் விலையை குறைத்துள்ளார்கள். ஆனால் சம்பிரதாயத்திற்காக தமிழக அரசு 2,3 ரூபாயை குறைத்திருக்கிறார்கள். கொல்லைப் புறத்தின் வழியாக ஆட்சியில் அமர்ந்திருக்கும் ஸ்டாலின் மக்களிடத்தில் பதில் சொல்லியாக வேண்டும். திமுகவின் பொய் வாக்குறுதிகளை அதிமுகவினர் மக்களிடத்தில் எடுத்துச் சொல்லி திமுகவின் முகத்திரையை கிழிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.