குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ₹1000 வழங்கும் திட்டம் விரைவில் அறிவிப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் தகவல்
பழனிசாமி – பன்னீர்செல்வம் சீரழித்த நிதி நிலைமையை, கொஞ்சம் கொஞ்சமா மீட்டுக் கொண்டு வருகிறோம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நகர்புற உள்ளாட்சித்தேர்தலுக்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக பிரசாரம் செய்து வருகிறார். தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சித்தேர்தல் வரும் 19-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக பல்வேறு கட்சிகள் பல விதமாக பிரசாரம் செய்து வருகின்றன.
இந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சியின் மூலம் பிரசாரம் செய்து வருகிறார். அவர், திண்டுக்கல்லில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்யும் போது பேசியதாவது, நடக்க இருக்கின்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், தமிழ்நாடு முழுவதும் உள்ள 12 ஆயிரத்து 825 பதவிகளிலும், திமுக வேட்பாளர்களும், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர்களும்தான் வெற்றி பெற்றாக வேண்டும்.
அவ்வாறு வெற்றி பெற்றால்தான், அது முழுமையான வெற்றியாக, மகத்தான வெற்றியாக இருக்கும். சட்டமன்றத்தில் நாம் நிறைவேற்றுகின்ற நல்ல பல திட்டங்கள் மக்களுக்கு முழுமையாகப் போய்ச் சேர வேண்டும். அதற்கு உள்ளாட்சி அமைப்புகள் முழுமையாக நம்முடைய கையில் இருக்க வேண்டும்.
கடந்த அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில், நம்முடைய மாநிலம் என்ன நிலைமைக்கு தள்ளப்பட்டது என்று தமிழ்நாட்டு மக்கள் எல்லாருக்குமே தெரியும். நான் சொல்லித்தான் உங்களுக்குத் தெரிய வேண்டும் என்ற அவசியமில்லை!
அதிமுக ஆட்சியில் இருந்தபோதே, நம்முடைய அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பல்வேறு ஆதாரங்களோடு லஞ்ச ஒழிப்புத்துறையில் மனு கொடுத்தார். சென்னை உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தாக்கல் செய்தார்.இப்படி, சென்னை மாநகராட்சியாக இருந்தாலும், மதுரை மாநகராட்சியாக இருந்தாலும், நகராட்சி அமைப்புகளாக இருந்தாலும் அ.தி.மு.க. ஆட்சியில் மலையளவு ஊழல்கள் செய்யப்பட்டன! இது எல்லாம் லஞ்ச ஒழிப்பு போலீசார் வசம், அவர்கள் ஆட்சியில் இருந்தபோதே அனுப்பி வைக்கப்பட்டு விட்டன. இப்போது திமுக ஆட்சியில் அதுபற்றி விரிவாக விசாரணை நடத்தி- முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
இதே மாதிரி மீண்டும் ஊழல் சாம்ராஜ்யத்தை நடத்த முடியுமா என்ற ஏக்கத்தோடுதான் ‘தினம் ஒரு பொய்’ நிகழ்ச்சியை, காமெடியாக நடத்திக் கொண்டு இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அ.தி.மு.க.வுக்கு அளிக்கிற வாக்கு என்பது ஊழலுக்கு அளிக்கும் வாக்கு. இதைத் தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் தெளிவாக உணர்ந்திருக்கிறார்கள்.
எடப்பாடி பழனிசாமியின் சாதனை என்ன என்று யாராவது கேட்டால், ‘மினி கிளினிக்’ என்று சொல்லுவார். ஆனால், உருப்படியாக எந்த இடத்திலும் அவர் மினி கிளினிக் அமைக்கவில்லை!
பத்தாண்டுகளாக சீரழிக்கப்பட்ட தமிழ்நாட்டை சீரமைத்தாக வேண்டும். அடகு வைக்கப்பட்ட நம் மாநில உரிமைகளை மீட்டாக வேண்டும். எதிர்காலத்துக்கு தேவையான திட்டங்களை நிறைவேற்றியாக வேண்டும். பழனிசாமி – பன்னீர்செல்வம் சீரழித்த நிதி நிலைமையை, கொஞ்சம் கொஞ்சமா மீட்டுக் கொண்டு வருகிறோம். கடன் மேல கடன் வாங்கி, அதற்கு வட்டி கட்ட முடியாமல், வட்டி கட்டக் கடன் வாங்கி, அதுக்கு வட்டி கட்டி என்று தமிழ்நாட்டை 5 லட்சம் கோடி கடனில் தமிழ்நாட்டைத் தள்ளி, கஜானாவை கபளீகரம் செய்து காலி பண்ணிட்டார்கள்.
இந்த நிலையில் இருந்து மீட்டு, விரைவில் ‘மகளிர் உரிமைத் தொகையான’- மாதம் 1000 ரூபாயையும் வழங்கப் போகிறோம். யாரையும் நாங்கள் ஏமாற்றப் போவதில்லை. இந்த ஸ்டாலின் ஒரு வாக்குறுதியை கொடுத்தால், அதை நிச்சயம் நிறைவேற்றுவான்!
இது தமிழ்நாட்டு தாய்மார்களான என்னோட சகோதரிகளுக்கு நன்றாகத் தெரியும். நான் காணொலியில் உங்களைச் சந்தித்திக் கொண்டு இருக்கேன். மக்களைச் சந்திப்பதை தவிர்ப்பதற்காக, நான் காணொலியில் பரப்புரை செய்வதாக, மக்களால் புறக்கணிக்கப்பட்ட சிலர் சொல்லிக் கொண்டு வருகிறார்கள். அவங்களுடைய கற்பனைத் திறனைப் பார்த்து எனக்கு சிரிப்புதான் வருகிறது.
இந்தக் காணொலி கூட்டங்கள் வழியாக ஒவ்வொரு மாவட்டத்திலும் ஐந்து லட்சம் பேரை ஒரே நேரத்தில் சந்திக்க முடிகிறது. ஒரே நேரத்தில் 500 இடங்களில், 700 இடங்களில் பொதுமக்கள் கூடி என்னுடைய பேச்சைக் கவனிக்கிறார்கள். இது கொரோனா காலம். இலட்சக்கணக்கானவர்களை இப்படி கூட்டி கூட்டம் நடத்துவது சாத்தியம் இல்லை. அதனால்தான் காணொலி மூலமாகச் சந்திக்கிறேன். இதனைத் தாங்கிக் கொள்ள முடியாதவர்கள், குறை சொல்கிறார்கள் என்று அவர் கூறினார்.