ரஷிய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்க நீர்மூழ்கி கப்பல் விரட்டியடிப்பு.
உக்ரைன் விவகாரத்தில் அமெரிக்கா-ரஷியா இடையே மோதல் போக்கு நிலவி வரும் சூழலில், அமெரிக்காவின் நீர் மூழ்கி கப்பல் தங்கள் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாகவும், அதனை தங்கள் நாட்டு வீரர்கள் விரட்டியடித்ததாகவும் ரஷியா தெரிவித்துள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்து ரஷிய ராணுவ அமைச்சகம் வெளிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
பசிபிக் கடலில் உள்ள குரில் தீவுக்கு அருகே ரஷியாவின் ‘மார்ஷல் ஷபோஷ்னிகோவ்’ போர் கப்பல் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, ரஷிய கடல் பகுதியில் அமெரிக்க கடற்படையின் வர்ஜினியா வகை நீர்மூழ்கி கப்பல் அத்துமீறி நுழைந்ததை ரஷிய கப்பல் கண்டறிந்தது.
அதனை தொடர்ந்து, கடலின் மேற்பரப்புக்கு வரும்படி விடுத்த கோரிக்கையை அமெரிக்க கப்பல் நிராகரித்ததை தொடர்ந்து, ரஷிய போர்க்கப்பலில் இருந்த வீரர்கள் அமெரிக்க கப்பலை விரட்டியடிப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்தனர். அதன் பின்னர் அமெரிக்க கப்பல் முழு வேகத்தில் அங்கிருந்து வெளியேறியது. இந்த சம்பவம் தொடர்பாக ரஷியா தலைநகர் மாஸ்கோவில் இருக்கும் அமெரிக்க ராணுவ அதிகாரிக்கு சம்மன் அனுப்பப்பட்டது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே ரஷிய கடல் பகுதியில் அமெரிக்க நீர்மூழ்கி கப்பல் அத்துமீறி நுழைந்ததாக கூறப்பட்ட குற்றச்சாட்டை அமெரிக்கா மறுத்துள்ளது.