ஹிஜாப் விவகாரம்: கர்நாடாகத்தில் 10ஆம் வகுப்பு வரை பள்ளிகள் மீண்டும் திறப்பு
கர்நாடகத்தில் ஹிஜாப் விவகாரத்திற்கு பிறகு இன்று மீண்டும் 10ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.
கர்நாடக மாநிலம் குந்தாப்பூர் அரசு பி.யூ. கல்லூரியில் இஸ்லாமியப் பெண்கள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு தடை விதித்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கல்வி நிலையங்களில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிய எதிர்ப்பு தெரிவித்து பாஜக மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஹிஜாப் விவகாரத்தில் தொடர்ந்த பதற்றமான சூழல் காரணமாக கடந்த பிப்ரவரி 8ஆம் தேதி முதல் கர்நாடகத்தில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
இந்த விவகாரத்தில் இஸ்லாமிய மாணவிகள் தொடர்ந்த வழக்கில் முழுமையான விசாரணை முடியும் வரை மத அடையாளங்களை குறிக்கும் வகையிலான ஆடைகளை அணிய கர்நாடாக உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்நிலையில், மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 10ஆம் வகுப்பு வரை இன்றுமுதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் அனைவரும் அமைதியான சூழலை ஏற்படுத்த ஒத்துழைக்கமாறு முதல்வர் பசவராஜ் பொம்மை கேட்டுக் கொண்டுள்ளார்.