சம்பள பாக்கி.. பத்திரிகை அலுவலகத்திலேயே UNI குமார் தற்கொலை.. குடும்பத்துக்கு முதல்வர் ஸ்டாலின் நிதியுதவி
சம்பள பாக்கி காரணமாக தனியார் நிறுவன செய்தியாளர் குமார் பத்திரிகை அலுவலகத்திலேயே தற்கொலை செய்துகொண்ட சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் , குமாரின் குடும்பத்திற்கு நிதியுதவியும் அளித்துள்ளார்.
பிரபல தனியார் செய்தி நிறுவனத்தின் சென்னை கிளையின் தலைமை நிர்வாகியாக இருந்த குமார், சம்பள பாக்கி காரணமாக அலுவலகத்திலேயே நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இன்று காலை அவரது உடலை கண்ட ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். பின்னர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் குமாரின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
குமாரின் இறப்புக்கு காரணம் சம்பள பாக்கி என்று தெரிவித்துள்ள சென்னை பத்திரிகையாளர் மன்றம், பத்திரிக்கை அலுவலகத்தில் உள்ள பிற ஊழியர்களுக்கும் சம்பள பாக்கி உள்ளதாகவும் அதனை வழங்கிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
இதனிடையே பத்திரிக்கையாளர் குமாரின் இறப்புக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர், மு.க.ஸ்டாலின், பத்திரிக்கை துறையில் நீண்ட அனுபவம் பெற்ற யு.என்.ஐ. செய்தி நிறுவனத்தின் சென்னை அலுவலக தலைமை நிர்வாகியும் மூத்த புகைப்பட கலைஞராகவும் பணியாற்றிய டி.குமார் தனது உயிரை மாய்த்துகொண்டார் என்ற செய்தியறிந்து வேதனையடைந்தேன்.
குமாரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொண்டு பத்திரிக்கை துறையைச் சேர்ந்த நண்பர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதலை தெரிவித்துகொள்வதாக கூறியுள்ளார். மேலும் , உயிரிழந்த குமாரின் குடும்பத்தினருக்கு பத்திரிகையாளர் நல நிதியத்தில் இருந்து 3 லட்சம் ரூபாய் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.