இலங்கைக்கு எதிரான டி20 போட்டி: தொடரை வென்றது ஆஸ்திரேலியா!

இலங்கை அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் இரண்டு டி 20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்று 2-0 என முன்னிலையில் இருந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டி20 போட்டியானது இன்று நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரரான நிஷன்கா மற்றும் குணதிலகா சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். அதிகபட்சமாக கேப்டன் ஷனகா 39 ரன்கள் எடுத்தார். இறுதியில் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 121 ரன்கள் எடுத்தது.

ஆஸ்திரேலிய அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய கேன் ரிச்சர்ட்சன் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதனை அடுத்து விளையாடிய ஆஸ்திரேலிய அணியில் தொடக்க ஆட்டக்காரரான மெக் டெர்மோட் டக் அவுட் ஆகி அதிர்ச்சியளித்தார். அவரை தொடர்ந்து ஆஷ்டன் அகர் 13 ரன்களில் வெளியேற 26 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இந்த போட்டி திரில்லிங்கான முடிவை நோக்கி செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கேப்டன் பின்ச் மற்றும் மேக்ஸ்வெல் நிதானமாக ஆடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர்.

பின்ச் 35 ரன்களுக்கும், மேக்ஸ்வெல் 39 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். இறுதியில், ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 124 ரன்கள் எடுத்தது. இதன்மூலம், ஆஸ்திரேலியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இலங்கை அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய மஹேஷ் தீக்‌ஷனா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 5 போட்டிகள் கொண்ட தொடரில் 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.ஆட்டநாயகனாக கேன் ரிச்சர்ட்சன் தேர்வு செய்யப்பட்டார்.

Leave A Reply

Your email address will not be published.