வன்னியருக்கு 10.5% உள்ஒதுக்கீடு விவகாரம்: மேல்முறையீடு மீது தமிழக அரசின் தரப்பில் வாதம்
கல்வி, அரசு வேலைவாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினருக்கான 20 சதவீதம் இடஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள்ஒதுக்கீடு அளிக்கும் சட்டத்தை ரத்து செய்த உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டு மனுக்கள் மீது உச்சநீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை இறுதிவாதம் தொடங்கியது. அதில், தமிழக அரசின் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் எல்.நாகேஸ்வரர ராவ், பி.ஆர். கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசின் தரப்பில் கூடுதல் தலைமை வழக்குரைஞர் வி.கிருஷ்ணமூர்த்தியுடன் மூத்த வழக்குரைஞர்கள் மனு சிங்வி, ராகேஷ் துவிவேதி, பி.வில்சன், முகுல் ரோத்தகி ஆகியோர் ஆஜராகினர்.
அவர்கள் முன்வைத்த வாதம்: தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீடு அமலில் உள்ளது. இதில், 30 சதவீதம் பிற்பட்ட வகுப்பினருக்கும், 20 சதவீதம் மிகவும் பிற்பட்ட வகுப்பினர், சீர்மரபினருக்கும் அளிக்கப்படுகிறது. 18 சதவீதம் எஸ்சி பிரிவினருக்கும், ஒரு சதவீதம் எஸ்டி பிரிவினருக்கும் அளிக்கப்படுகிறது. 20 சதவீத ஒதுக்கீட்டில் 10.5 சதவீதம் வன்னியருக்கு உள்ஒதுக்கீடாக அளிக்கப்பட்டுள்ளது. இந்த உள் ஒதுக்கீடு உரிய சட்ட விதிகளுக்கு உள்பட்டும், போதிய தரவுகள் அடிப்படையிலும், பிற்பட்டோர்- மிகவும் பிற்பட்டோர் வகுப்பு ஆணையத் தலைவரின் பரிந்துரையின் அடிப்படையிலும் செய்யப்பட்டுள்ளது. ஆனால், அதை உரிய வகையில் பார்க்காமல் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
தமிழக அரசின் 69 சதவீத இடஒதுக்கீடு சட்டத்துக்கு அரசியல்சாசன சட்டத்தின் 9-ஆவது அட்டவணையின் கீழ் பாதுகாப்பு உள்ளது. இந்த இடஒதுக்கீட்டை அளிக்கும் 1994-ஆம் ஆண்டின் சட்டத்துக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக இந்த உள்ஒதுக்கீடு இருப்பதால், இது சிறப்புச் சட்ட வரம்பில் வராது. இதனால், குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற வேண்டிய தேவையில்லை. இடஒதுக்கீடு தொடர்புடைய தமிழக அரசின் 1994-ஆம் ஆண்டின் சட்டத்துக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. அது வகைப்படுத்தப்பட்டுள்ளது. அரசியலமைப்புச் சட்ட அமர்வுகள் அளித்த சில வழக்குகளின் தீர்ப்புகளில் உள்ஒதுக்கீடு அளிக்கலாம் எனக் கூறியுள்ளது.
இந்த விஷயங்களை உயர்நீதிமன்றம் கருத்தில் கொள்ளவில்லை. உரிய தரவுகள் இல்லாமல் உள்ஒதுக்கீடு சட்டத்தைக் கொண்டுவந்ததாகக் கூறியிருப்பதும் தவறு. ஏற்கெனவே 1969-இல் சட்டநாதன் ஆணையத்தில் இருந்து அம்பா சங்கர் கமிஷன் உள்பட பல்வேறு ஆணையங்களின் அறிக்கையை முறையாக ஆராய்ந்த பிறகே இந்த உள்ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், இது ஒரு சிறப்புச் சட்டமும் அல்ல. ஏற்கெனவே உள்ள சட்டத்தின் தொடர்ச்சியாகத்தான் உள்ளது. 1994-ஆம் ஆண்டு சட்டத்துக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டுள்ள நிலையில், அது தொடர்புடைய இந்த உள்ஒதுக்கீட்டு சட்டத்துக்கு தனியாக குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறத் தேவையும் இல்லை என்று வாதிட்டனர்.
மனுசிங்வி, ராகேஷ் துவிவேதி வாதிடும்போது, “இந்த விவகாரத்தில் சில அரசியலமைப்புச் சட்ட விவகாரங்கள் உள்ளன. அதனால், அந்த அம்சங்களையும் நீதிமன்றம் பரிசீலனை செய்ய வேண்டும். அது தேவையில்லை என்று நீதிமன்றம் கருதினால், இந்த ஒதுக்கீட்டீன் தகுதிநிலை குறித்து நாங்கள் வாதங்களை முன்வைக்க விரும்புகிறோம். அரசியலைப்பின் ஷரத்துகள் தொடர்பாக விளக்கம் அளிக்கப்படும் தேவை உள்ளது. இதனால், 5 நீதிபதிகள் கொண்ட அரசியல்சாசன அமர்வுக்கு இந்த வழக்கை பரிந்துரைக்க அனுப்ப வேண்டுமா என்பது நீதிமன்றத்தின் விருப்பத்துக்கு உள்பட்டது’ என்றனர்.
மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்குரைஞர்கள் சி.எஸ். வைத்தியநாதன், பி.வில்சன் மற்றும் பாமக தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் எம்.என். ராவ், “இந்த விவகாரத்தை அரசியல் சாசன அமர்வுக்கு அனுப்பும் தேவை எழவில்லை. உரிய விஷயங்களை தீர ஆராய்ந்த பிறகே உள்ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளதால் இந்த நீதிமன்றமே இதை விசாரித்து முடிவு செய்யலாம். அதேவேளையில், 102, 105 அரசியலமைப்புச் சட்டத்திருத்தங்களைப் பொருத்தமட்டில் இந்த வழக்கு அதற்கு பொருந்ததாது. ஏனெனில், இது மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான உள்ஒதுக்கீடு சட்டமாகும். ஆகவே, அந்த விஷயத்திற்காக மட்டுமே இந்த விவகாரத்தை அரசியல்சாசன அமர்வுக்கு பரிந்துரைக்க வேண்டிய தேவை எழவில்லை’ என்று வாதிட்டனர்.