சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் 20 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு..

பெண் பக்தர் சாமி கும்பிட சென்றபோது சாதிப்பெயரை சொல்லி திட்டியாக அளித்த புகாரில் சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் 20 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஏற்கெனவே தீட்சிதர்கள் மீது கொலை முயற்சி புகார் அளித்த சக தீட்சிதர் சாமி கும்பிட சென்றபோது மீண்டும் தீட்சிதர்கள் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தீட்சிதர்களிடையே அதிகரித்து வரும் மோதலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு உள்ளான கணேஷ் தீட்சிதர் என்பவர் சாமி கும்பிட சென்றபோது சக தீட்சிதர்களால் தடுத்து தாக்கப்பட்டதாக அவர் போலீசில் அளித்த புகாரின் பேரில் சிதம்பரம் நகர போலீசார் 3 தீட்சிதர்கள் பேர் கொலை முயற்சி வழக்குபதிவு செய்திருந்தனர். இந்நிலையில் மறுநாள் அவரது மகனான தர்ஷன் தீட்சிதர் என்பவர் பெண் பக்தர் ஒருவரை சாமி கும்பிட கனகசபைக்கு அழைத்துச் சென்றபோது கனகசபை மீது ஏறக் கூடாது என தீட்சிதர்கள் தடுத்து சாதி பெயரை சொல்லி திட்டியதாக சிதம்பரத்தைச் சேர்ந்த பெண் பக்தர் ஜெயஷீலா என்பவர் சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் ஏற்கனவே புகார் அளித்திருந்தாரர்.

அந்தப் புகாரின் பேரில் சிதம்பரம் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பெண் பக்தர் ஜெயஷீலா அளித்த புகாரில் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் 20 பேர் மீது கூட்டமாக சேர்ந்து தடுத்தல், தாக்குதல், மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இதற்கிடையே நடராஜர் கோயில் தீட்சிதர்கள் சார்பில் செய்தியாளர்களிடம் பேசிய ஐயப்பதீட்சிதர் என்பவர், கோயில் விதிமுறைகளுக்கு முரணாக கணேஷ் தீட்சிதர் மற்றும் தர்ஷன் தீட்சிதர் ஆகிய இருவரும் செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.

நேற்று கணேஷ் தீட்சிதர் மற்றும் தர்ஷன் தீட்சிதர் ஆகிய இருவரும் கோயிலுக்கு சாமி கும்பிட சென்றனர். கனகசபை மீது ஏற முயன்றபோது அவர்களை சக தீட்சிதர்கள் மீண்டும் தடுத்தனர். அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதமும் ஏற்பட்டது.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த தர்ஷன் தீட்சிதர், சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை எனக் கூறப்படும் சிற்றம்பல மேடையில் ஏறி அனைவரும் சாமி கும்பிட வேண்டும் என்பதே எனது விருப்பம். அதற்காகத்தான் போராடிக் கொண்டிருக்கிறேன். சோழர்கள் கட்டிய நடராஜர் கோயிலில் கனகசபை மீது யாரும் ஏறக்கூடாது என தீட்சிதர்கள் எப்படி உத்தரவு பிறப்பிக்க முடியும். இது தவறானது.

போலீசில் புகார் அளித்து வழக்குப்பதிவு செய்யப்பட்ட 3 தீட்சிதர்களும் கோயிலுக்குள்தான் இருக்கின்றனர். பூஜை செய்கின்றனர். அவர்கள் கைது செய்யப்படவில்லை. நாங்கள் கொடுத்த புகாரை வாபஸ் வாங்க வேண்டும் என்று கோயில் தீட்சிதர்கள் எங்களிடம் சொல்கின்றனர். நடராஜர் கோயிலின் கனகசபை மீது அனைவரும் ஏறி சாமி தரிசனம் செய்ய வேண்டும் என்பதுதான் எங்களது விருப்பம். பழைய முறைப்படி அனைவரும் சாமி தரிசனம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.