தேர்தல் முடிந்ததும் நல்ல அறிவிப்பு வெளியிட உள்ளேன்.. முதல்வர் ட்விஸ்ட்… என்னவா இருக்கும்?
தேர்தல் முடிந்ததும் நல்ல அறிவிப்பு வெளியிட உள்ளேன் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை புத்தகக் கண்காட்சியில் கூறியுள்ளார்.
சென்னை 45-வது புத்தகக் கண்காட்சியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். அந்த விழாவில் பேசிய முதல்வர், “2007-ஆம் ஆண்டு இந்தப் புத்தகக் கண்காட்சியைத் தொடங்கி வைத்த கலைஞர் வருகை தந்த நேரத்தில், அப்போது நிகழ்ச்சியில் பேசிய எழுத்தாளர் பிரபஞ்சன் ‘முதலமைச்சர் வந்தால் அறிவிப்பு இல்லாமல் இருக்காது’ என்று சொன்னார்.
‘ஒரு எழுத்தாளன் சொன்னது வீண் போக விட்டுவிடக் கூடாது’ என்று அதைக் குறிப்பிட்டுப் பேசிய கலைஞர் தனது சொந்த நிதியில் இருந்து ஒரு கோடி ரூபாயை பபாசி அமைப்புக்கு வழங்கி இந்த விழாவில் பொற்கிழி வழங்கக்கூடிய நிலைக்கு இந்த நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருக்கிறோம்.
அந்த வகையில், முதலமைச்சராக வந்துள்ள நானும் ஒரு அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று தான் ஆசையோடு வந்தேன். ஆனால், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், அதனுடைய விதிமுறைகள் எல்லாம் உங்களுக்குத் தெரியும். எனவே, அந்த அடிப்படையில் இப்போது அறிவிக்க முடியாது. இவ்வளவு நாள் பொறுத்திருந்தீர்கள், இன்னும் இரண்டு நாட்கள் பொறுத்திருங்கள். விரைவில் நல்ல செய்தியை நான் அறிவிப்பேன்.
இது போன்ற புத்தகக் கண்காட்சிகள் தொடர்ந்து நடக்கட்டும். வாசிப்புப் பழக்கம். விரிவடையட்டும்! நானிலமெங்கும் அறிவுத்தீ பரவட்டும். கொரோனா காலம் என்பதால் அரசின் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்து இந்தப் புத்தகக் கண்காட்சி சிறப்புடன் இயங்கட்டும் என்று மனதார, நெஞ்சார தமிழக அரசின் சார்பிலும், என்னுடைய சார்பிலும் வாழ்த்தி விடைபெறுகிறேன்.” என்றார்.