சிங்கப்பூர் தூதருக்கு மத்திய அரசு சம்மன்
இந்திய எம்.பி.க்கள் குறித்து சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் ஆட்சேபத்துக்குரிய கருத்து தெரிவித்ததற்காக இந்தியாவுக்கான சிங்கப்பூர் தூதர் சைமன் வாங்கை அழைத்து, மத்திய அரசு வியாழக்கிழமை கண்டனம் தெரிவித்தது.
சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் அண்மையில் நாடாளுமன்றம் செயல்படும் விதம் குறித்து பேசிய அந்நாட்டின் பிரதமர் லீ சியென் லூங், இந்திய எம்.பி.க்கள் குறித்து கருத்து தெரிவித்தார்.
அவர் பேசுகையில், “”ஊடக அறிக்கையின்படி, நேருவின் இந்தியா ஏறத்தாழ சரிபாதி, குற்றப் பின்னணி கொண்ட எம்.பி.க்களைக் கொண்ட இந்தியாவாக இன்று மாறிவிட்டது. அதிலும் சிலர் மீது பாலியல் வன்கொடுமை, கொலை உள்ளிட்ட தீவிர குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இருந்தாலும், அதில் பெரும்பாலான குற்றச்சாட்டுகள் அரசியல் ரீதியாக புனையப்பட்டவை என்று கூறப்படுகிறது” என்றார்.
அவரது இந்தக் கருத்துக்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்ததுடன் இந்தியாவுக்கான சிங்கப்பூர் தூதர் சைமன் வாங்கை வியாழக்கிழமை அழைத்து கண்டனத்தை பதிவு செய்தது.
இதுகுறித்து மத்திய வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் கூறுகையில், “சிங்கப்பூர் பிரதமரின் கருத்து தேவையற்றது. இந்த விவகாரத்தை அந்நாட்டின் கவனத்துக்கு கொண்டு சென்றோம்’ என்றனர்.