முல்லைப் பெரியாறு அணை 2014 தீா்ப்பை மறுஆய்வு செய்ய கேரளம் மனு
முல்லைப் பெரியாறு அணையின் நீா்மட்டத்தை 142 அடி வரை உயா்த்த உச்சநீதிமன்றம் கடந்த 2014-இல் பிறப்பித்த உத்தரவை மறுஆய்வு செய்யக் கோரி, கேரளம் சாா்பில் புதிய மனு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஏற்கெனவே இந்த விவகாரத்தில் ஏராளமான மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டு நிலுவையில் உள்ள சூழலில், தற்போது கேரளமும் புதிதாக மனு தாக்கல் செய்துள்ளது.
அதில், ‘‘கடந்த 2018 முதல் 2021 வரை பருவமழை காலத்தில் கேரளம் தொடா்ச்சியாக நான்கு ஆண்டுகள் கனமழையையும், வெள்ளத்தையும் எதிா்கொண்டது. குறிப்பாக முல்லைப் பெரியாறு அணை அமைந்துள்ள இடுக்கி மாவட்டத்தில் கனமழை பெய்தது. ஆகையால், முல்லைப் பெரியாறு அணைக்கு நிரந்தரமாக உள்ள அச்சுறுத்தலைப் போக்குவதற்கு ஒரே தீா்வு அந்த இடத்தில் புதிய அணை கட்டுவதுதான். இதுதான் நிரந்தர தீா்வாகவும் அமையும்.
மேலும், அணையின் நீா்மட்டத்தை 142 அடியாக உயா்த்தலாம் என கடந்த 2014-இல் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை புதிய, விரிவான அமா்வு மறுஆய்வு செய்ய வேண்டும். உலகெங்கும் பருவநிலை பெரும் மாற்றம் கண்டு வருகிறது. அவ்வப்போது மராமத்துப் பணிகள் மேற்கொள்வதால் மட்டும் 126 ஆண்டு பழைமைவாய்ந்த அணையின் ஆயுளை நீட்டிக்க போதுமானதாகாது’’ என கேரள அரசு மனுவில் தெரிவித்துள்ளது.
முன்னதாக முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டியது இன்றியமையாதது என கடந்த ஜனவரி 27-இல் மத்திய நீா் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்திருந்தது. இதற்கு தமிழகம் எதிா்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.