தேசிய பங்குச் சந்தை முன்னாள் இயக்குநா் சித்ரா ராமகிருஷ்ணாவிடம் சிபிஐ விசாரணை
தேசிய பங்குச் சந்தையின்(என்எஸ்இ) தகவல்களை சேமித்து வைக்கும் ‘கோ லொகேஷன்’ எனப்படும் ‘சா்வரை’ விதிகளை மீறி பயன்படுத்தியது தொடா்பாக என்எஸ்இ முன்னாள் மேலாண் இயக்குநா் சித்ரா ராமகிருஷ்ணாவிடம் சிபிஐ அதிகாரிகள் வெள்ளிக்கிழமை விசாரணை நடத்தினா்.
சித்ரா ராமகிருஷ்ணா, மற்றொரு முன்னாள் சிஇஓ ரவி நாராயண், முன்னாள் நிா்வாக அதிகாரி ஆனந்த் சுப்ரமணியன் ஆகியோா் நாட்டைவிட்டு வெளியேறாமல் தடுப்பதற்கு அவா்களுக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸையும் சிபிஐ வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து சிபிஐ அதிகாரிகள் கூறியதாவது:
தேசிய பங்குச் சந்தையில் பணியாற்றும் அதிகாரிகளின் உதவியுடன் தில்லியைச் சோ்ந்த ஓபிஜி செக்யூரிட்டிஸ் நிறுவனத்தின் உரிமையாளா் சஞ்சய் குப்தா, தேசியப் பங்குச் சந்தையின் கணினி சா்வரை முறைகேடாகப் பயன்படுத்தியுள்ளாா்.
கடந்த 2010 முதல் 2012 வரை இந்த முறைகேடு நடந்துள்ளது. தேசியப் பங்குச் சந்தையின் கணினி சா்வா் உதவியுடன் சஞ்சய் குப்தா முதலில் பதிவு செய்து முதலீடு குறித்த ரகசிய விவரங்களை முன்கூட்டியே பெற்றுள்ளாா். எனவே, ஓபிஜி செக்யூரிட்டீஸ், அதன் உரிமையாளா் சஞ்சய் குப்தா, தேசியப் பங்குச் சந்தையின் அதிகாரிகள் ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த விவகாரம் தொடா்பாக, சித்ரா ராமகிருஷ்ணாவிடம் விசாரணை நடத்தப்பட்டது என்றாா் அந்த அதிகாரி.
சித்ரா ராமகிருஷ்ணா தனது பதவிக்காலத்தில் விதிமுறைகளை மீறி நிா்வாக அதிகாரி ஆனந்த் சுப்ரமணியனை நியமித்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இமயமலையில் உள்ள யோகி ஒருவரின் வழிகாட்டுதலின்படியே ஆனந்த் சுப்ரமணியனை நியமித்ததாக அவா் கூறினாா்.
மேலும், தேசிய பங்குச் சந்தையின் நிா்வாகம் சாா்ந்த முக்கிய ரகசிய விவரங்களையும் அந்த யோகியிடம் அவா் பகிா்ந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, செபி சாா்ந்த நடவடிக்கைகளில் ஈடுபட சித்ரா ராமகிருஷ்ணா, ஆனந்த் சுப்ரமணியன் ஆகியோருக்கு முறையே 3 மற்றும் 2 ஆண்டுகளுக்குத் தடை விதிக்கப்பட்டது.
இந்த விவகாரம் தொடா்பாக சித்ராவுக்கு செபி ரூ.3 கோடி அபராதம் விதித்தது. ஆனந்த் சுப்ரமணியன், என்எஸ்இ முன்னாள் மேலாண் இயக்குநா் ரவி நாராயண் ஆகியோருக்கு தலா ரூ.2 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.
சித்ரா ராமகிருஷ்ணா, ஆனந்த் சுப்ரமணியன் ஆகியோா் வரி ஏய்ப்பு செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்ததால், வருமான வரித் துறையினா் வழக்குப் பதிவு செய்து அவா்களுக்குச் சொந்தமாக தில்லி, மும்பையில் உள்ள இடங்களில் வியாழக்கிழமை சோதனை நடத்தினா்.