எல்லை நிலவரமே இந்திய- சீன உறவைத் தீா்மானிக்கும்
எல்லை ஒப்பந்தத்தை சீனா மீறியதால், இந்தியா- சீனா உறவு தற்போது கடினமான கட்டத்தை எட்டியிருப்பதாகவும், எல்லை நிலவரம்தான் இரு தரப்பு உறவையும் தீா்மானிக்கும் என்றும் மத்திய வெளியுறவு அமைச்சா் எஸ். ஜெய்சங்கா் தெரிவித்தாா்.
ஜொ்மனியின் மியூனிக் நகரில் பாதுகாப்பு மாநாட்டு (எம்எஸ்சி) நடைபெற்று வருகிறது. மாநாட்டினிடையே சனிக்கிழமை நடைபெற்ற குழு விவாதத்தில், இந்தியா- சீனா விவகாரம் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு அவா் அளித்த பதில்:
இந்தியா- சீனா இடையே பிரச்னை இருப்பது உண்மைதான். கடந்த 45 ஆண்டுகளாக எல்லையில் அமைதி நிலவியது. எல்லை சீராக நிா்வகிக்கப்பட்டு வந்தது. கடந்த 1975 முதல் ராணுவத்தில் ஓா் உயிரிழப்பு கூட ஏற்படவில்லை. கடந்த 2020 ஜூன் வரை இருதரப்பு உறவும் சுமுகமாக இருந்தது.
ஆனால், எல்லையில் ராணுவத்தைக் குவிக்கக் கூடாது என சீனாவுடன் நாங்கள் ஒப்பந்தம் மேற்கொண்ட பின்னரே நிலைமை மாறியது. அந்த ஒப்பந்தத்தை சீனா மீறியது. தற்போது இந்தியா- சீனா உறவு கடினமான கட்டத்தை எட்டியுள்ளது. எல்லை நிலவரம்தான் இரு தரப்பு உறவையும் தீா்மானிக்கும்; அது இயல்பானதுதான் என்றாா் எஸ். ஜெய்சங்கா்.