உத்தவ் தாக்கரேவை சந்தித்த சந்திரசேகர ராவ்.. பாஜகவுக்கு எதிரான கூட்டணியை அமைப்பதில் தீவிரம்!!

பிரதமர் மோடியை தொடர்ந்து விமர்சித்துவரும் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர், இன்று மகாராஷ்டிராவுக்கு சென்று அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரேவை சந்தித்துள்ளார்.

2019 தேர்தலில் வென்று இரண்டாவது முறை ஆட்சியமைத்த பின், மத்திய திட்டங்களையும், நினைத்தபடி புதிய சட்டங்களையும் பாஜக-வால் எளிதில் நிறைவேற்ற முடிகிறது. இதனால் மேற்கு வங்கம், தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களுடன் மத்திய பாஜக-வுடன் பிணக்குகள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக மேற்கு வங்கத்தில் பாஜக-வுக்கும், ஆளும் திரிணமுல் காங்கிரசுக்கும் போரே மூண்டுள்ளது எனலாம்.

ஆளுநர் ஜக்தீன் தன்கரை டிவிட்டரில் மம்தா பிளாக் செய்யும் அளவிற்கு மோதல் முற்றியது. இதுபோல், நீட் உள்ளிட்ட விவகாரங்களில் மத்திய அரசுடன் திமுக-வுக்கு மோதல் நீடித்து வருகிறது. இதுபோல் நகையும், சதையுமாக இருந்த மகராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரேவுடனும், பாஜக-வும் கீரியும், பாம்புமாக மாறிவிட்டனர்.

இதனிடையே, மோடியுடன் மோதல் போக்கை கொண்டுள்ள தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவுடன் மம்தா பேசினார். ராமானுஜர் சிலை திறப்புக்கு வந்த பிரதமரை வரவேற்கக் கூட செல்லாத சந்திரசேகரராவ், மம்தா பேசியதைக் குறிப்பிட்டு, வரும் 20-ம் தேதி உத்தவ் தாக்கரேவை சந்தித்து பேச உள்ளதாக கூறப்பட்டது.

இந்நிலையில், சந்திரசேகர் ராவ் இன்று மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவை நேரில் சென்று சந்தித்தார். தொடர்ந்து, தாக்கரேவின் வீட்டில் உள்ள தோட்டத்தில் உத்தவ் தாக்கரே, அவரின் இளைய மகன் தேஜஸ், சந்திரசேகர் ஆகியோர் அமர்ந்திருப்பது போன்ற விடியோ வெளியானது.

வரும் 2024ஆம் ஆண்டு, மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் இல்லாத அணியை உருவாக்கும் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக, பிராந்திய தலைவர்களை அவர் சந்தித்துவருகிறார். அப்போது, சிவசேனா கட்சியின் செய்தித்தொடர்பாளர் சஞ்சய் ராவத், நடிகர் பிரகாஷ் ராஜ் ஆகியோரும் உடனிருந்தனர்.

இதுகுறித்து மகாராஷ்டிர முதல்வர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், தாக்கரேவின் அழைப்பின் பேரில் சந்திரசேகர் மதிய உணவு அருந்தவந்தார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்ந்து, சந்திரசேகரராவுடன், முன்னாள் பிரதமர் தேவகவுடாவும் சந்தித்து, பாஜக-வுக்கு எதிரான போரில் பங்கேற்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ஆகிய இருவர் மட்டுமே பாஜக-வை நேரடியாக பகைக்க விரும்பாத நிலையில், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் அணி சேர வாய்ப்பு உள்ளது. கேரள முதல்வர் பினராயி விஜயன் இணைவதில் ஐயமே இல்லை.

Leave A Reply

Your email address will not be published.